நூல்:- சொர்க்கத்தில் சில காலங்கள்.
நூல்வகை :- சிறுகதை
நூலாசிரியர்:- காசி ஆறுமுகம்
வெளியீடு:- பைந்தமிழ் இலக்கியப் பேரவை.
விலை :- 100.
உலகப் பரப்பில் எல்லா நாடுகளிலும், எல்லா மக்களிடமும் வாய்மொழியாகவே காலங்காலமாகக் கதைகள் சொல்லப்பட்டு வந்திருப்பதை பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.
மனிதகுல வரலாற்றில் நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே இனக்குழுக்களாக மக்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்வதற்காகவும், ஓய்வு நேரங்களில் சக மனிதர்களோடு உரையாடவும், குடும்ப உறுப்பினர்களோடு கொஞ்சிக் குலவி சிரித்து மகிழவுமான பொழுதுபோக்கு நிகழ்வே நாளடைவில் கதையாக வளர்ந்திருக்கிறது. தான் பார்த்த ஒன்றை, கேட்ட ஒன்றை, தான் பார்த்ததைப் போலவே, கேட்டதைப் போலவே பிறர் விரும்புமாறு காட்சிப்படுத்தி உரைப்பது கதையாகும்.
இன்றும் குழந்தைகளுக்கோ அல்லது இளைஞர்களுக்கோ கதை சொல்லத் தொடங்கும் போது "ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்..." என்று தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. கதைகளில் பொய்க்கதை, பழங்கதை புனைகதை, கட்டுக்கதை என பல வடிவங்கள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை குழந்தைகளுக்கு கதை சொல்வது. "பாட்டி சொன்ன கதை" இன்றும் சிற்றூர்ப் புறத்தில் வழக்கில் இருந்துவருகிறது. தற்காலத்தில் சிறுகதை என்பது எழுத்துலக வரலாற்றில் பிரிக்க முடியாத ஒன்றாக, தவிர்க்க முடியாத ஒன்றாக வளர்ந்திருக்கிறது. அறிவியல் வளர்ச்சி மிக்க நாடு என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளில் கூட சிறுகதை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
அவ்வகையில் சிறுகதை என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்து வருவதோடு, அவர்களது வாழ்வியல் விழுமியங்களை எதிரொளிக்கும் காலக் கண்ணாடியாகவும் மிளிர்கிறது.
"சொர்க்கத்தில் சில காலங்கள்" என்னும் தலைப்பிலான இந்நூல் 12 சிறுகதைகளை உள்ளடக்கியது. முழுமைக்கும் நெல்லை மாவட்ட மக்களின், குறிப்பாக மண்மணம் மாறாத சிற்றூர்ப்புற மக்களின் வாழ்வியலைச் செம்மையாகப் பதிவு செய்திருக்கிறது. பெரும்பான்மையான சொற்கள் பேச்சு வழக்கில் உள்ளவைகளாக இருக்கின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கில் இருந்த புழங்கு சொற்கள் இந்நூலில் ஒவ்வொரு கதையிலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
"சொர்க்கத்தில் சில காலங்கள்" இந்நூலின் ஆசிரியர் காசி ஆறுமுகம், இவர் பொறியாளர் படிப்பை நிறைவு செய்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். கவிதை, சிறுகதை எழுதுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இவர் படிப்பவர் உள்ளம் கொள்ளுமறு சுவை குறையாமல் 12 சிறுகதைகளையும் கொடுத்திருப்பது மிகவும் பாராட்டுதற்குறியது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு சிற்றூர்ப் புறத்திலும் மருத்துவச்சிகள் இருந்தார்கள். அங்கு பேறு காலம் என்பது இயற்கையாகவே நடந்தது. அறுவை சிகிச்சை முறைகள் இல்லை. இப்படி நூற்றுக்கணக்கான பிள்ளைகளுக்குப் பேறுகாலம் பார்த்த மருத்துவச்சிகள் வாழ்வு அவர் வாழும் காலத்திலேயே மதிக்கப்படவில்லை.
ஆனால் இன்று அறிவியல் வளர்ச்சி அடைந்திருக்கிற இந்தக் காலகட்டத்தில் பேறு காலம் என்பது பெரும்பாலும் மருத்துவமனையில் தான் நடக்கிறது. பெரும்பான்மையான பேறுகாலம் அறுவை சிகிச்சையில் தான் நடக்கிறது. நமது சிற்றூர்ப் புறங்களில் மருத்துவச்சிகள் வாழ்ந்த பகுதிகளில் அவர்களைப் புரந்து, அவர்களிடம் இயற்கை மருத்துவ முறைகளைக் கற்றுக் கொள்ளாமலும், அதனை விட்டதன் விளைவாகவும், செயற்கை முறையிலான மேல்நாட்டு மருத்துவத்தைப் பின்பற்றியதன் விளைவாகம் நம் நாட்டு மக்கள் தாயையும் சேயையும் புதைகுழிக்குள் தள்ளி வருகின்றனர் என்ற நிலையை பல நூறு "பிள்ளைகளைப் பெற்றவள்" என்ற கதை மூலம் மிகத் தெளிவாக படம் பிடிக்கிறார் நூலாசிரியர்.
மனிதன் நாகரிக வளர்ச்சி அடைந்ததாகச் சொல்லப்படுகின்ற இன்றைய நிலையிலும், தன்னுடைய முதன்மையான வேட்டைத் தொழிலை விட்டபாடில்லை, என்றாலும் தற்போது விலங்குகளை வேட்டையாடுவதைத் தாண்டி சக மனிதனை வேட்டையாடும் நிலைக்கு மனிதன் மாறி கிடக்கின்றான். இப்படியான சூழலில் வேட்டைத் தொழிலில் தான் செய்த வேலையால் தாயும் சேயும் துடிதுடித்துச் சாவதைத் தன் கண்முன்னால் கண்ட பின்பு நிறைமாதக் கர்ப்பிணியான தனது மனைவி நினைவுக்கு வர அன்று முதல் வேட்டையாடுகின்ற தொழிலை விட்டு விடுகின்றான் என்ற இரண்டாவது கதையின் மூலமாக "எவன் ஒருவன் பிற உயிர்களைத் தன் உயிர்போல் கருதுகின்றானோ, அப்போதே அவனுக்குள் மனிதம் விழித்துக் கொள்கிறது" என்று பதிவு செய்வது சிறப்பு.
மனித வாழ்வியலில் பண்டைய விழுமியங்களை, கலை கலாச்சாரங்களைச் சேமித்து வைத்திருக்கின்ற கருவூலங்களாக ஒவ்வொரு குடும்பத்திலும் பெரியோர்கள் திகழ்கின்றனர். அவர்கள் சேமித்து வைத்திருந்த கருவூலங்களே எதிர்காலத் தலைமுறையினரைச் செப்பம் செய்திருக்கின்றன. அந்தக் கருத்துக் கருவூலங்களில் ஒன்றுதான் கதை. கதை கேட்டுக் கதை கேட்டு வளர்ந்த மக்கள் தான் அதிகம். அவர்களே வீரத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர் என்பது வரலாறு.
இன்றைக்கு எந்தக் குடும்பத்திலும் கதை சொல்லுகின்ற பாட்டிமார்கள் இல்லை. ஒரு குடும்பத்தில் ஒரு பெரியவரை நாம் இழக்கிறோம் என்றால், அந்தக் குடும்பத்தின் வரலாறான நூலகத்தை நாம் இழக்கிறோம் என்பது பொருள். இதனை மூன்றாவது கதையில் அருமையாகல் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
"சமூகத்தில் சமையல் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் நல்ல நண்பர்களது வாழ்வியல்"
"பீடி சுருட்டு என்ற தொழிலைச் செய்து வருகின்ற ஏழை குடும்பத்தில் பிறந்த பெண் பிள்ளைகளைப் பொறியாளர் நிலைக்கு உயர்த்துவதற்காக பெற்றோர்களது கடின உழைப்பு"
"ஊரெங்கும் ஓடி ஆடி விளையாடிய குழந்தைகள், மனித வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து பழகிய உறவு முறைகள், குடும்ப விழாக்கள் என அனைத்தையும் தொலைத்துவிட்டு கைப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றில் தன்னை புதைத்துக் கொண்டு, தனக்குத் தானே தனிமையில் பேசிக் கொண்டிருக்கின்ற அவலநிலை"
மது என்னும் அரக்கன் பட்டிதொட்டியெல்லாம் புகுந்து மனித மனங்களை சீரழிப்பது தொடர்பாக"
ஊரெங்கும் உள்ள உறவு முறைகளில் யார் மனமும் நோகாமல், திருடு போன்ற சிறு சிறு தவறுகளையும் சரிசெய்ய அவர்கள் கடைப்பிடித்த நெறிமுறைகள் "
காலந்தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் ஊறிக்கிடக்கும் நம்பிக்கைகள் "
அறிவியல் வளர்ச்சியில் தற்பொழுது காலத்தால் மறந்துபோன மழைக் கஞ்சி விழா, எடுத்த சமூகத்தில் மழையைத் தள்ளிப்போக பிள்ளைகள் பாடும் பாட்டு"
'ரெயின் ரெயின் கோ அவே'
" விரும்பியது கிடைக்கவில்லை என்றால் அது ஏக்கமாக மாறி அவனுக்கு காய்ச்சலை உண்டாக்கி விடும் என்ற சமூகத்தில் இருக்கின்ற நம்பிக்கைகள்"
"தொழிலைப் பெருக்குவதற்காக கையிருப்பு இல்லாத சூழலில் வட்டிக்கு வாங்கி வட்டி கட்ட முடியாமல் நின்ற அப்பாவிகளின் நிலை" "உழவர்களின் நண்பனான தேவாங்கு" என சமூகம் தொலைத்துச் சென்ற பலவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முகமாக, ஒவ்வொரு நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து மண் மனம் மாறாத மக்கள் மொழியில் பதிவு செய்திருக்கின்ற கவிஞர் சிறுகதை ஆசிரியர் காசி ஆறுமகம் அவர்களை பாராட்டுகிறோம்.
இந்தச் சிறுகதைகள் நூலாக்கம் தொடர்பான பணிகளை முன்னெடுதிருக்கின்ற பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் பாசத்திற்குரிய மகன் அதிவீரபாண்டியன் அவர்களை வாழ்த்துகிறோம்.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவனர் - வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.