இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 29 September 2021

அந்தோணி ஐயா நினைவேந்தல் உரை - ச.ந.இளங்குமரன்

18-09-2021 திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை நடத்திய வாசிக்கலாம் வாங்க குழுவின் தலைவர் அந்தோணி ஐயா அவர்களது நினைவேந்தல் நிகழ்வில் எனது உரை...

வசிக்கலாம் வாங்க... இந்தக் குழு சரியாக நேரடியாகவும், இணைய வழியாகவும் நாற்பத்தி ஏழு நிகழ்வுகளை நடத்தியிருக்கிறது. சுமார் 900 நூல்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தக் குழு எப்படி உருவானது என்றால் அன்றொரு நாள் எனது படைப்புலகம் குறித்து தினமலர் அக்கம் பக்கம் நிகழ்வுக்காக நேர்காணல் எடுப்பதற்காக கார்த்திக் ஐயா என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார். எனது பணிக்கும், எனது படைப்புக்கும் சற்றும் தொடர்பு இல்லாததைப் புரிந்துகொண்ட அவர்களுக்கு அது வியப்பைத் தந்தது போலும். உடனே கார்த்திக் ஐயா அவர்களுக்கு என் மேல் என் பணி தொடர்பாக வியப்பும் உருவாகியிருக்கிறது. 

நேர்காணல் முடிந்ததும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நூல் வாசிப்பு பற்றிக் கேட்டார். நூல் வாசிப்பு தொடர்பாக விமர்சனக் கூட்டம் நடத்தலாமே என்றும் சொன்னார். அதற்கு நான் "தங்களைப் போலவே எனக்கும் ஆசை இருக்கிறது ஐயா, ஆனால் இடமும் பொருளும் இல்லை. ஒரு இலக்கிய நிகழ்வு நடத்த சில ஆயிரம் ரூபாய்கள் செலவிட வேண்டிவரும். ஒவ்வொரு மாதமும் நிகழ்வுக்காக அரங்க வாடகை கொடுக்க வேண்டியது வரும். அதற்குரிய பொருளியல் நிலை நம்மிடம் இல்லை" என்று சொன்னேன். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவர் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். மாயா புத்தகக் கடை உரிமையாளர் அண்ணன் ஜெயதுரை அவர்கள் அவருடைய புத்தக நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளும் படியாக சொன்னார் என்றும், அது தொடர்பாக நாளை நாம் கூடிப் பேசலாம் என்றும் சொன்னார்.

அடுத்த நாள் இது குறித்து முடிவு செய்வதற்காக மாயா புத்தக நிலையத்திற்குச் சென்றேன். உரிமையாளர் ஜெயதுரை அண்ணன் அவர்கள் அன்போடு வரவேற்றார். பின்பு "உங்களுக்கு முன்னே ஒருவர் இங்கு வந்திருக்கிறார்" என்று ஒருவரை அடையாளம் காட்டினார். அவர் அந்தப் புத்தக கடைக்குள் சில புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தார். என்னை பார்த்தார், கும்பிட்டார் பின்பு பேசினார். அவர்தான் அந்தோணி ஐயா. இதுதான் எங்களின் முதல் சந்திப்பு. எப்படி அந்தோணி ஐயா அவர்களை திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் பாசமிகு செந்தில் ஐயா அவர்கள் கண்டெடுத்தார்களோ, அதைப் போலத்தான் நாங்களும் அந்தோணி ஐயா அவர்களைக் கண்டெடுத்தோம்.

மாயா புத்தக நிலையத்தில் எனது ஒருங்கிணைப்பில் சில மாதம் வாசிக்கலாம் வாங்க நிகழ்வு தொடர்ந்தது. அதன் பின்புதான் குழு கட்டமைக்கப்பட்டது. அக்கட்டமைப்பில் அந்தோணி ஐயா அவர்கள் தலைவராகவும், நந்தகோபால் ஐயா அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுமார் 22 நிகழ்வுகளுக்கு ஜெயதுரை அண்ணன் அவர்கள் தன்னுடைய இடத்தைக் கொடுத்தும், நூல்கள் பரிசாகக் கொடுத்தும் தேநீர் கொடுத்தும், உதவி செய்தார். வாசிக்கலாம் வாங்க நாற்பத்தி ஏழு நிகழ்வுகளை நடத்தி இருக்கிறது என்றால் அதற்கு அடி வேராக இருந்த அன்றைய தினமலர் செய்தியாளர், இன்றைய விகடன் மாவட்டச் செய்தியாளர் கார்த்திக் ஐயா அவர்களையும், மாயா புத்தக நிலைய உரிமையாளர் அண்ணன் ஜெயதுரை அவர்களையும் விட்டுவிட்டு நான் கடந்து சென்றுவிட முடியாது. அவ்வாறு நான் கடந்து சென்றால் நன்றி கொன்றவன் ஆகிவிடுவேன்.

அந்தோணி ஐயா அவர்களைத் தலைவராகப் பெற்றது பெரும் பாக்கியம் தான். ஏனென்றால் நிகழ்வு தொடர்பாக முழுமையான உரிமை எனக்குக் கொடுத்திருந்தார். அதனால்தான் என்னால் சுதந்திரமாக இயங்க முடிந்தது தொடர்ந்து அமைப்பைக் கொண்டு செலுத்த முடிந்தது.

தமிழன்னைக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்பது தொடர்பாக கருங்கல்லிருந்து ஐயா பாவலர் கண்ணன் அவர்கள் தேனிக்கு வந்திருந்தார்கள். நிகழ்வினை கவிஞர் அனுராஜ் அண்ணன் அவர்கள் ஒருங்கிணைத்தார். இது விஜய் நிவாசு விடுதிகளில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் என்னோடு அந்தோணி ஐயா அவர்களும், அண்ணன் தங்கப்பாண்டி, ஜெயபாண்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள். தமிழனை தமிழ்ச்சங்கம் தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்தல் தொடர்பான கூட்டம் அது. அந்த வகையில் அந்தோணி ஐயா அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். "இலக்கிய நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதில்லை. இப்பொழுது நான் கலந்து கொள்வதற்கு இளங்குமரன் ஐயா தான் காரணம். இவரே எனக்கு நல்ல வழிகாட்டி. இவருடைய நட்பு மட்டும் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்திருந்தால் நான் பெரும் பாக்கியம் உடையவனாக இருந்திருப்பேன்" என்று அவர் பேசியது என்னை நெகிழ வைத்தது.

ஐயா அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் இல்லை. அவர் உள்ளத்தில் என்ன எண்ணினாரோ அதை அப்படியே பேசுவார். சில நேரங்களில் சட்டென்று கோபப்பட்டும் விடுவார். அந்தோணி ஐயாவிடம் நான் பேசும்போதே அவர் என்னிடம் அதிகமாக பகிர்ந்து கொண்டது இருவர். ஒருவர் பாஸ்கர் சக்தி, இன்னொருவர் திண்ணை செந்தில்குமார்.

செந்தில் ஐயா அவர்கள் பேசும்பொழுது சாளரம் திட்டம் பற்றியும் பேசினார்கள். அந்த சாளரம் திட்டம் தொடர்பாக செந்தில் ஐயா அவர்களோடு கைகோர்த்து அதற்கான தொகையைச் சேர்ப்பதற்காக பல இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறார். அதன் விளைவாகச் சொன்னார் "நான்குபேர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நான் ஒருவன் பிச்சை எடுப்பதில் தவறில்லை" என்று சொன்னார்.

பின்பு கதை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டினார். ஒவ்வொரு முறையும் அவர் ஒரு சிறிய குறிப்பேட்டில் எழுதி அதனை சரி பார்க்கும்படி என்னிடம் கொடுப்பார்.

அது தொடர்பாக எனது தமிழ்ச் சங்க அலுவலகத்தில் பலமுறை சந்தித்துப் பேசி இருக்கிறார். தொடர்ந்து வையைத் தமிழ் சங்கம் நடத்திய கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். அதன் தொடர்ச்சியாக மரபில் கவிதை எழுத வேண்டும் என்று விரும்பினார். எனவே நான் நடத்தி வந்த மரபு பயிலரங்கம் தொடர்பான புலனத்தில் ஐயாவை இணைத்து விட்டேன். அவர் குறள் வெண்பாவும், நேரிசை வெண்பாவும் எழுதக் கற்றுக் கொண்டார். ஒவ்வொரு முறையும் எழுதிய பின்பு அது சரியாக இருக்கிறதா? இலக்கண விதியின்படி சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கச் சொல்லுவார். 

ஐயா அவர்களிடம் எனக்கு பிடித்த இன்னொன்று அவருடைய அகவைக்கு தக்கவர்களோடு பேசும்போது அந்த உயர்விலும், அதேநேரத்தில் இளைஞர்களோடு பேசும் போது அவர்களுடைய வயதுக்கு இறங்கி வந்தும் பேசுவது அந்தோணி ஐயாவின் இயல்பாக இருந்தது. அது அவருக்கே உரிய சிறப்புகளில் ஒன்றாகவும் இருந்தது. 

ஐயா அவர்கள் 92 நாட்களில் 92 நூல்களை வாசித்து மதிப்புரை பதிவு செய்து இருந்தார்கள் என்று செந்தில் ஐயா தனது குறிப்பில் சொன்னார்கள். இன்னொன்று அந்தோணி ஐயா அவர்களுடைய பெயரால் படைப்பாளர்களுக்கு நினைவு விருது ஏற்பாடு செய்து வழங்குவது தொடர்பாக உள்ளபடியே செந்தில் ஐயா அவர்களை பாராட்டுகிறேன். அதிலும் அந்தோணி ஐயா அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவர் பெயராலேயே விருது வழங்குவது நெகிழ்சசியைத் தருகிறது. வாழ்ந்த காலத்திலேயே அந்த மனிதருக்கு வரலாற்று நிகழ்வை ஏற்படுத்தியிருக்கிறார். இதனை செந்தில் ஐயா அவர்கள் செய்யவில்லை என்றால் வேறு யாரும் செய்வது கடினம்தான். அதற்காக ஒத்துழைத்தை திண்ணை மன்தவள மேம்பாட்டுக் குழுமத்தை வாழ்த்துகிறேன். இச்செயலின் மூலமாக வரலாற்றில் அந்தோணி ஐயாவை நிலை நிறுத்தியிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

அந்தோணி ஐயா அவர்கள் பதிவு செய்த 100 நாட்களில் 100 நூல்களின் மதிப்புரைகளைத் தொகுத்து வைத்துள்ளேன். அவற்றை விரைந்து நூலாக்கம் செய்ய வேண்டும் என்று செந்தில் ஐயாவும் வேண்டுகோள் விடுத்தார். அந்த நூலின் பக்கம் என்பது 486 பக்கங்கள், தற்பொழுது ஏற்பட்ட ஊரடங்கால் தொழில் முடக்கம் காரணமாக, பொருள் முடக்கம் காரணமாக இந்த நூல் வருவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகும். ஆனால் வரலாற்றில் அவர் பெயர் நிலைக்கும் படியாக அவரது மதிப்புரைகள் அடங்கிய நூல் இருக்கும், அதனை விரைவில் வெளிக்கொணர்வேன் என்று கூறி ஐயாவின் பெயரால் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்தினையும், விருதாளர்களை அறிமுகப் படுத்திய ஆளுமைகளுக்குப் பாராட்டுகளையும், திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஐயா உள்ளிட்ட தோழமைகளுக்கு நன்றியும் கூறி அமைகிறேன்.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்
நிறுவனர்-வையைத் தமிழ்ச்சங்கம், தேனி மற்றும வாசிக்கலாம் வாங்க... தேனி.

(நன்றி - ஒளிப்படம் அன்பு மகன் தேனி பாண்டி)

Monday, 27 September 2021

திருக்குறள் திருமணம் - இளங்குமரன்

https://tamil.news18.com/news/local-news/theni/theni-marriage-happened-through-thirukkural-in-theni-skd-570979.html

யார் இந்த இளங்குமரன்

நன்றி...
சுதர்சன் செய்தியாளர்
அழகேசன் புதிய செய்தி

Tuesday, 14 September 2021

நம் அண்ணா (கவிதை) ச.ந.இளங்குமரன்

தமிழ்நாட்டு அரசியலில்
தவிர்க்க முடியாத
பேரதிசயம்
அண்ணா!

இலக்கியத்தில்
நிலையாமையை
உணர்த்தும் திணை
காஞ்சி!

அண்ணா உன்
பிறப்பால் 
நிலைத்துப் 
புகழ்பெற்றது
காஞ்சி!

முந்தைய காலத்தின்
தொடர்ச்சி!
பிந்தைய காலத்தின்
பெரும் புரட்சி
அண்ணாவின் ஆட்சி!

மண்ணுக்கும் 
பெண்ணுக்கும்
பொன்னுக்கும் 
போர்செய்த 
வரலாற்றைப்
புறம்தள்ளி
பேசும் மொழிக்காக
அரசியல் களம்
கண்ட அறிஞர்
அண்ணா!

தமிழ் தமிழரென்ற
பேசுபொருளுக்குச்
சொந்தக்காரர்!

இந்தியின் ஆதிக்கத்தை
இல்லாது ஒழிக்க
இருமொழிக் 
கொள்கையை
ஏந்திய ஏந்தல்!

தமிழ்நாடு பெயர்தந்தாய்!
தமிழ் வாழப் பணிசெய்தாய்!
தமிழர் திருமணங்கள்
தழைக்கச் செய்தாய்!

எழுத்தில் புதுநடை!
பேச்சில் புரட்சி!
நாடகத்தில் 
பகுத்தறிவு!
மக்களுக்குச் சமூகநீதி!
சாதியத்திற்குச் சவுக்கடி!
மூடத்த தனங்களுக்கு
முற்றுப்புள்ளி!

அண்ணலே
உன் பிறந்தநாளில்
பெருமிதம் கொள்கிறோம்!

ச.ந.இளங்குமரன்.

Sunday, 12 September 2021

காதல்... விதை... - ச.ந.இளங்குமரன்.

காதல் விதை...

விழியால்
விருந்து
வைக்கும்
வியத்தகு
பூக்களின்
தேவதை!

மெளன 
மொழியால்
மனத்தை
மயக்கும்
மன்மத
மதுக்கிண்ணம்!

நீலவான்
ஆடைக்குள்
ஒளிந்து
முகம்காட்டும்
முழுநிலா!

கொஞ்சலில்
மிஞ்சலில்
கோபத்தில்
சினுங்களில்
அவளொரு கவிதை!

என் காதல்
கவிதைகளுக்கு
அவளே
உயிரான விதை!

ச.ந.இளங்குமரன்

Friday, 10 September 2021

குறள்நெறித் தமிழ்த் திருமணம் - புலவர் ச.ந.இளங்குமரன்

10-09-2021 இன்று சங்கரன் கோவிலில் இ.மகேந்திரன் - இரா.கவிதா இணையருக்கு குறள் நெறியில் திருமணம் நிகழ்த்தி வைத்தேன். நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.பசும்பொன், தமிழாசிரியர் மகேந்திரன், ஆகியோர் வாழ்த்துரைக்க, நாம்தமிழர் கட்சியின் தங்கவேலு அவர்கள் நன்றி சொல்ல சங்கரன் கோவில் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் பட்டிமன்றப் பேச்சாளர் முனைவர் சங்கர்ராம் அவர்கள் விழா ஏற்பாட்டைச் சிறப்பாகச் செய்திருந்தார். அனைவரது சிறப்பான ஒத்துழைப்போடு திருமணம் நடந்தது. திருமண நிறைவில் இளைஞர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்திருமண விழா மிகவும் சிறப்புடையது. பரவலாக்கப்பட வேண்டியது என்று சொல்லி இளைஞர்கள் பலரும் நாங்கள் பலரும் பல உங்களுக்குத் துணையாக நிற்போம் என்று ஊக்கம் கொடுத்தது நெகிழ்வாக இருந்தது. இந்த நல்லதொரு விழவிற்கு இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்த உலகத் தமிழ்க் கழகத் தலைவர் ஐயா நிலவழகனாருக்கும், சங்கரன் கோவிலில் இறங்கியதுமுதல் கூடவே இருந்து உணவளித்து தமிழர்கள் விருந்தோம்பல் பண்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சங்கர்ராம் ஐயா, அவர்களது துணைவியார் உள்ளிட்ட குடும்பதார்க்கும் நன்றி சொல்லி மணமக்களுக்கு நான் எழ்திய திருக்குறள் உரையைப் பரிசாக வழங்கி மீண்டும் தேனிக்குப் பயணமானேன். பாவாணர் கோட்டத்திற்குச் செல்லவேண்டும் என்ற நினைவு நெஞ்சை வாட்டினாலும் உடல் நலக்குறைவால் மீண்டும் தேனிக்குத் திரும்பினேன்.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.