இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 23 July 2021

திருவள்ளுவர் உள்ளம் (அமிழ்தம்)

திருவள்ளுவர் உள்ளம்.

அமிழ்தம்.

திருவள்ளுவர் தமதுநூலில்  "அமிழ்தம்" என்னும் சொல்லை ஆண்டுள்ள குறள்களையும், அவற்றின் சிறப்புகளையும் ஆய்வதே இப்பதிவின் நோக்கம்.

அதிகாரம் - 2. வான் சிறப்பு.
குறள் எண் - 11.
"வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று".

தேவநேயப்பாவாணர் இக்குறளுக்கு வழங்கிய ஆய்வுரை வருமாறு:- 
"மழை உலகிற்குச் சாவா மருந்து எனக்கருதப்பெறும் தன்மையது. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும் நீரும், தொடர்ந்த பசி, தகை (தகை = தாகம்) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தால், 'இருமருந்து' எனப்படும். நீரும் சோறும் மழையாலேயே பெறப்படுதலால், மழை உலகிற்கு அமிழ்தமாயிற்று. 

ஆயினும், பிணி மூப்பு சாக்காடு ஆகியன இருத்ததால், சாவாமை என்பது சாக்காடு வரையுள்ள நிலைமையேயாம். மருந்தினால் நோய் நீங்கியவரை சாவினின்று தப்பினானென்று கூறும் வழக்கைக்காண்க.

அமிழ்தம் என்னுஞ்சொல், சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும். அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ்- அவிழ்து- அவிழ்தம்-அமிழ்தம் = உணவு. "அறுசுவை நால்வகை யமிழ்தம்" (மணி. 28:16). அவிழ்து-அமிழ்து- அமுது = சோறு, உணவு, நீர். நீரும் உணவாதலால் அமுதெனப்பெற்றது. அமிழ்தம்-அமுதம் = சோறு, நீர்.

மருமம்- (மம்மம்) - அம்மம் = முலை, தாய்ப்பால், குழந்தையுணவு. பாலும் ஒருவகை யுணவாதலாலும், அம்மம், அமுது என்னுஞ்சொற்களின் ஒருபுடை யொப்புமையினாலும், அமுது என்னுஞ்சொல்லும் பாலைக்குறித்தது. அமுது = பால், அமுதம் = பால், அமிழ்து = பால்.

அமுதம் என்னும் தென்சொல் வடமொழியில் அம்ருத என்னும் வடிவுகொள்ளும். அவ்வடிவை அ+ம்ருத என்று பிரித்து, சாவை(மரணத்தை)த்தவிர்ப்பது என்று பொருளுணர்த்தி, அதற்கேற்ப தேவரும் அசுரரும் திருப்பாற்கடலைக்கடைந்தெடுத்த அமிர்தம் என்று கதையுங்கட்டிவிட்டனர் வடமொழியாளர். தேவர் அமுதமுண்டார் என்பது கட்டுக்கதையாதலால், தேவாமிர்தம் என்னும் இல்பொருளை உண்மையாகக் கூறுவதால் ஒரு பயனுமில்லையென்று உணர்க".

பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் ஆகியோர் உரைகள், அமிர்தம் என்பதற்கு பாற்கடலைக்கடைந்து பெறப்பட்ட தேவாமிர்தம் என்னும் பொருளையே தருகிறது. இது எவ்வாறு தவறென்பதை இறுதியில் காண்போம்.

அதிகாரம் - 7. மக்கட்பேறு.
குறள் எண் - 64.
"அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறுகதை அளாவிய கூழ்".

கூழ் = சோறு. தம் என்னுஞ்சொல், பெற்றோரின் உடற்கூறாயிருந்து அவருடம்பினின்றும் வெளிப்பட்ட மக்களின் நெருங்கிய தொடர்பை உணர்த்தும். தேவரும் (சுரரும்), அசுரரும் திருபாற்கடலைக்கடைந்தெடுத்த சுரையை, தேவர் உண்டதனால் சுரர் எனப்பட்டாரென்றும், அச்சுரை சாவைத்தவிர்த்ததனால் அம்ருத எனப்பெயர் பெற்றதென்றும், கதை கட்டிவிட்டனர். அதைக்குருட்டுத்தனமாய் நம்பிய தமிழர், விண்ணுலகப்பொருளெல்லாம், மண்ணுலகப்பொருனினும் மிகச்சிறந்தவை யென்னும் பொதுக்கருத்துப்பற்றி, தலைசிறந்த இன்சுவை யுண்டியை
 அமிழ்து என்றும், அமிழ்தினும் இனியதென்றும் சொல்லத்தலைப்பட்டனர் - இவை, தேவநேயப்பாவாணர் ஐயாவின் விளக்கவுரை.

அதிகாரம் - 9. விருந்தோம்பல்.
குறள் எண் - 82.
"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று".
சாவாமருந்து = சாவை நீக்கும் மருந்து.

அதிகாரம் - 72. அவையறிதல்.
குறள் எண் - 720.
"அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்".

அறிவால் தம்மினத்தவர் அல்லாதவர் உள்ள அவைக்கண், அறிஞராவார் நிகழ்த்தும் அரும்பொருள் சொற்பொழிவு, சாய்கடைக்குள் ஊற்றிய பாலைப்போலும்" - இது தேவநேயப்பாவாணர் ஐயாவின் உரை.
பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார், நாமக்கல் கவிஞர் ஆகியோர், அமிழ்தம் என்னுஞ்சொல்லை நேரடியாக ஆண்டுவிட்டனர். தேவநேயப்பாவாணர், பால் எனவுரைத்ததில் ஒரு சிறப்புண்டு. பாலென்பது உடனடியாக ஆற்றல் தரும் உணவு. சோறுண்ணும் பருவமெய்தாத குழந்தைகளுக்கும் உணவாக இருப்பது.

அதிகாரம் - 111. புணர்ச்சி மகிழ்தல்.
குறள் எண் - 1106.
"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டாலால் பேதைக்கு 
அமிழ்தின் இயன்றன தோள்".

"நான் இவளைத்தழுவும் போதெல்லாம் என் உயிர் தழைக்குமாறு தீண்டுதலால், இவ்விளம் பெண்ணிற்குத்தோள்கள் அமிழ்தினால் அமைக்கப்பெற்றனவாய் 
யிருக்கின்றன" - இது தேவநேயப்பாவாணர் ஐயாவின் உரை. பாவாணர் ஐயாவின் இவ்வுரை தலைவன் கூற்றாக அமைந்து, அவனுயிர் தளிர்த்தலைச்சொல்வதாக அமைந்துள்ளது. தீண்டலால், தலைமகள் உயிரும் தளிர்க்குமல்லவா? ஆகவே,  பொதுகூற்றாக இதனைக்கொள்வதே பொருந்தும்.
மேலும், தளிர்த்தலுக்கு, முன்நிகழ்வாக வாடுதல் இருந்திருக்க வேண்டுமல்லவா? அதனை பாவாணரய்யா வெளிப்பட வுரைக்கவில்லை.
 
பரிமேலழகர், 'தன்னைப்பெறாது வாடிய என்னுயிர்' எனவுரைக்கிறார். வ.உ.சிதம்பரனார், 'கூடாத காலத்து இறந்துபடுவதான உயிரைக் கூடியகாலத்துத் தழைக்கப் பண்ணுதலால் தோள்களை அமிழ்தத்துக்கு ஒப்பிட்டான்', எனவுரைக்கிறார். நாமக்கல் கவிஞர், 'உறுதோறுயிர் தளிர்ப்பத் தீண்டலால்' என்பதைத் 'தீண்டல் உறுந்தோறும் உயிர் தளிர்ப்பதால்' என்ற முறையில் பொருள் கொள்ளவேண்டும் என்றும்; ஒவ்வொரு தடவையும் தீண்டல் புதுப்புதுச் துடிப்பை உயிருக்கு உண்டாக்குகிறது என்றும்; அமிர்தம் என்பது ஓய்ந்துவிட்ட உயிரையும் மீண்டும் செழிக்கச் செய்யும் என்று சொல்லப்படுகிற அரியபொருள் என்றும் உரைக்கின்றார். நாமக்கல் கவிஞர்  வாடுதலைப்பற்றி வெளிப்படக்கூறவில்லை என்பதுடன்  புதுப்புதுத் துடிப்பு, பதுப்புதுச் செழிப்புகள், புதுப்புது துளிர்கள் எனக்கூறி, தளிர்த்தலை ஒரு நேர்கோட்டியக்கமாக உருவகப்படுத்துகிறார். பாற்கடல் அமிர்தம் (தேவாமிர்தம்) ஓய்ந்துவிட்ட உயிரை மீண்டும் செழிக்கச்செய்யாது. இயங்குகின்ற உயிர் ஓய்ந்துவிடாமல் காக்கும் 
என்றே சொல்லப்பட்டுள்ளது. இவை இருக்கட்டும்.

இக்குறளில்தான் அமிழ்தம் என்பதற்கான இலக்கணத்தை ஐயன் வுரைக்கிறார். "தோறும்" என்னுஞ்சொல் மிகமுதன்மையானது. ஒவ்வொருமுறை சேரும்போது தளிர்த்தல் நிகழுகிறது. மறுதலையாக நீங்கும்போது வாடுதல் நிகழ்கிறது. இவ்விரண்டும் மாறிமாறி நிகழ்கின்றன. இதுதான் வள்ளுவர் கூறும் அமிழ்திற்கான இலக்கணம்; வரையறை. புராணத்தில் சொல்லப்பட்ட தேவாமிர்தம் ஒருமுறை உண்டால் போதும்; மீண்டும் மீண்டும் உண்ணவேண்டியதில்லை. தேவாமிர்தம் ஒருமுறை உண்டபின் வாடுதல் நிகழ்வதில்லை. 

ஆகவே, மீண்டும் மீண்டும் உண்ணப்படுவதால் சோறு (நீரும் பாலும் உள்ளடங்கும்), உயிரைத்தளிர்ப்பச்செய்கிறது. ஆகவே, உணவு அமிழ்தம்.

ஐயன் திருவள்ளுவர், இரண்டு அமிழ்தங்களைச்சொல்கிறார். உண்ணுந்தோறும் உடலுக்கு ஆற்றலை தரும் "உணவு" என்னும் அமிழ்தம் ஒன்று. உறுதோறும் உள்ளம் (உயிர்) தளிர்க்கக்செய்யும் அன்புடையார் சேர்க்கையாகிய "காதலன்பு" மற்றொன்று. இவை மண்ணுலக அமிழ்தங்கள். நமது துய்பினால் உடலின் பாகமாகவும், உணர்வாகவும் ஆகக்கூடிய மண்ணுலக அமிழ்தங்கள். எனவே, ஐயன் புராணத்தில் சொல்லப்பட்ட தேவாமிர்தத்தைச்சொல்லவில்லை

(நற்றமிழ் புலனம் இரவிச்சந்திரன் ஐயா அவர்களது பதிவிலிருந்து ச.ந.இளஙகுமரன்)

No comments:

Post a Comment