இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Sunday, 25 July 2021

சாதி... ஆய்வறிஞர் ப.அருளி

சாதி!


சாதி!..
அருமையான தூய தமிழ்ச்சொல்! இச்சொல் உருவாக்கப் பெற்று நடைமுறைப்படுத்தப்படுகையில் மாசு மருவில்லாத தெளிவான விளக்க அமைப்பில் கூட்டம்(திரள்) என்ற பொருளில் தமிழர்களால் வழங்கியது!

"நாற்றம்" என்னும் சொல் பழங்காலத்தில் நறுமணத்தை மட்டுமே குறித்து வழங்கப் பெற்று நாளடைவில் தீயமணத்தைக் குறித்து வழங்கி இன்று "இழிபொருள்பேறு" பெற்றுவிட்ட நிலை போன்றே-கூட்டம் (திரள்) என்னும் கருத்தைக் குறித்து வழங்கிய இச் 'சாதி' என்னும் அப்பழுக்கற்ற விலங்காண்டியுணர்ச்சியில் ஒருமடயன் அல்லது தான் அல்லது தாம் தனிப்பட்ட கொடிவழிமரபினன்(ர்) என்னும் வெறிப்புணர்வோடு சூட்டிக்கொண்டு இழிவேற்படுத்திக் கொள்ளும் கட்டப் பெயரைச் சுட்டும் பொதுக் கொடுஞ்சொல்லாகி இழிவேறிப் பயிலப்பெறுகின்றது!

"நீர் வாழ் சாதியும் அது பெறற்குரிய” -“நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே" என்றவாறுள்ள மிகப் பழைய தொல்காப்பிய நூற்பாக் களுள்ளேயே இந்தச் சாதி என்னும் சொல், கூட்டம் (திரள்) என்னும் பொருளில் மட்டுமே ஆளப்பெற்ற உண்மையைக் காணலாகும்.

இவ்வாறு சாதி என்ற சொல்லுக்கு இக்காலத்தே வழங்கும் பொருள் அன்று இல்லாதிருந்தது என்று கூறுவதால் அந்தக் காலத்தில் அத்தகு உணர்வே நம் தமிழ் மக்களிடம் இல்லை; பிறர் ஏதோசூழ்ச்சியால் நம்மீது திணித்தது என்றவாறான பொருள்களில் நாம் இதனைக் கூறவரவில்லை.

சாதி உணர்வே தமிழர்களிடம் முற்காலத்தில் இருந்ததில்லை. ஏனெனில் “சாதி" என்ற சொல்லே தமிழ்ச்சொல் இல்லை என்பது போலும் விளக்கங்கள் இம்மண்ணில் முழக்கப்பெறுகின்றன! இவை தவறான கருத்துக்களாகும்.

நிற அடிப்படையாக வெண்களமன் - காராளன் இருளன் என்றவாறும்; இட அடிப்படையாக சோழிய வெள்ளாளன் தென்னார்க்காட்டு இருளர் ஆர்க்காட்டு முதலி என்றவாறும்; திசையடிப்படையாக தென்திசை வேளாளர் என்றவாறும்; குடியிருப்பு அடிப்படையாக கோட்டை வேளாளன், தெருவான் என்றவாறும்; உணவு அடிப்படையாக (சைவ) சிவனிய வேளாளன் புலையன் தவளைதின்னி என்றவாறாகவும். அணிமுறை அடிப்படையாக கொண்டை கட்டி - பச்சைகுத்தி வேளாளர் -நீறுபூசி வேளாளர் என்றவாறாகவும்; விற்பனைப் பண்டங்கள் அடிப் படையாக கூலவாணியன் இலைவாணியன் எண்ணெய் வாணியன் என்றவாறாகவும்; கோயில்தொண்டு அடிப்படையாகதேவ கணிகையர் பூவாண்டிப் பண்டாரம் உப்பாண்டிப் பண்டாரம் என்றவாறாகவும்; கருவிகள் பயன்படுத்திய அடிப்படையாக கவண்டன் செங்குந்தன் - வலையன்- மேளக்காரன் - சிறுபாணள் பெரும்பாணன் படையாட்சி என்றவாறாவும்: பண்பு அடிப்படையாக கள்ளன் - கள்ளன் என்றவாறாகவும்; அலுவல் அடிப்படையாககணக்கன் என்றவாறாகவும்; கல்வி அடிப்படையாக புலவன் - பண்டாரம் - ஓதுவான் என்றவாறாகவும். முன்னோர்பட்ட அடிப்படையாக உடையான்- முதலி - பிள்ளை களம்வென்றான் என்றவாறாகவும்; சடங்கு அடிப்படையாக பன்னிரண்டு நாள் போன்றவாறும்; முறை அடிப்படையாக அம்மாப்பள்ளர்-ஆத்தாப் பள்ளர் என்றவாறாகவும்; தொகையடிப்படையாக ஆயிர வணிகள். ஐஞ்ஞற்றான் பாணன் என்றவாறாகவும் விலங்கு வேட்டை அடிப்படையாக வேட்டுவன் - நரிக்குறவன் நாயாடி - எருதையாடி என்றவாறாகவும் சுடந்த ஈராயிரம் ஆண்டுகள் காலச்சுழற்சியில் தொடர்ந்து தொடர்கின்ற குலவழி- தொழில்வழி பிரிவுகள் இம்மண்ணில் முறிந்தபடியாகவே இயல்பாய் இயங்கினதாம்.

இவற்றில் மிகப்பல ஆரிய வருகைக்கு முற்பட்டே இங்கு நிலைத்திருந்தனதாம்! இவ் வகைக் குலப்பிரிவுகள் எவற்றையும் எந்த ஆரியப் பார்ப்பானும் தனியே உருவாக்கி நிலை நிறுத்தவில்லை. இவற்றைச் செய்தவனும் இயக்கியவனும் அதற்குட்பட்டு இயங்கினவனும் இந்தத் தறுதலைத் தமிழனே!

'பறை பதினெட்டு நுளை நூற்றியெட்டு" என்றவாறு (சொலவடை) பழமொழி வரியமைப்பை உண்டாக்கியவனும் அவை உருவாவதற்கு மூலகாரணனாக இருந்தவனும் இதே தமிழமுட்டாள்தான் ! இந்தியாவில் (இந்திய நாடாம் இந்தியநாடு!) உள்ள மக்கள் தொகையில் ஏழு விழுக்காடு அளவுள்ள நம் தமிழ்க் குலத்தில் மட்டும் மலைசாதிகளாக 36 பிரிவுகள் அலைகின்றன! தாழ்த்தப்பட்டசாதிகளாக 80 பிரிவுகள் அல்லாடுகின்றன! பிற்பட்ட சாதிகளாக 150 பிரிவுகள் பிய்ந்துப் பிளவுற்று இரண்டுங்கெட்டான் களாக இடுக்கணாடுகின்றன! முற்பட்ட சாதிகளாக 50 பிரிவுகள் முழங்கிக் கிழிக்கின்றன. இப்படி 300 பிரிவுகளுக்கும் மேற்பட்ட கழிவுக் கூலங்களாகத் தமிழ்க்கூடு சிதறிச் சீரழிந்துக்கிடக்கின்றது,

இந்த முந்நூறு பிரிவுகளுக்குள்ளும் அகப்பிரிவுகள், புறப்பிரிவுகள், அகப்புறப்பிரிவுகள், புறப்புறப்பிரிவுகள் பேராளப் பேராளமாகப் பிளவுற்றுப் பீற்றுகின்றன!

மொத்தத்தில் தமிழ்க்குலமே சாதிச் சாய்க்கடையில் தனித்தனிப் புழுக்குலப் பிரிவுகளாகிப் போய்விட்டது. ஒவ்வொரு புழுக் குலமும் தனித்தனி நொதிமச் சேற்றில் தாம்தாம் தோன்றினோமென்று அறிவியலும் அரசியலும் பேசுகின்றன! இந்நிலைகள் இத்தமிழ்மண்ணில் மட்டுமன்றி இந்த நாவலத்தீவு

(இந்தியா) முழுமைக்கும் சொந்தமாகவே இருந்து வருகின்றன.

கன்னடத்தில் சாதியை ஒழிக்கக்கிளம்பிய பன்னிரண்டாம் நூற்றாண்டு பசவர் இயக்கத்தவர்கள் இன்றைக்கு "லிங்காயத்து" சாதிக்காரர்களாக தனித்து நிற்கிறார்கள். கபீர்தாசு இயக்கம் 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சாதிகளை ஒழிக்க எழுந்து இன்று "கபீர்பாந்தி" என்னும் தனிச் சாதியாகித் தனித்து வாழ்கின்றது. “மெய் மட்டுமே கடவுள். சாதிகள் ஒழியவே வேண்டும்" என்று சுடுங் கட்டியங்கூறிக் கிளம்பிய சகவேன்தாசென்னும் அரசபுத்திர இயக்கத்துக்காரர்கள் அனைவரும் 17-ஆம் நூற்றாண்டின் இறுதி யிலிருந்து “சத்தமி" என்னும் சாதிப்பிரிவாகிச் சந்தியில் தனியே நிற்கிறார்கள் 19-ஆம் நூற்றாண்டின் ரயிதாக இயக்கத்தவர்கள் சாதியை ஒழிக்க முயன்ற சாதியினராகி சமார் சாதிக்காரர்களாகத் தனிப்பட்டார்கள். ஆக, சாதியை ஒழிக்க முனைந்தவர்களே தனிச்சாதிகளாக சாதிமுறைகளின் தன்மைகளை அப்படியே கடைப்பிடித்துக் குட்டிச்சுவராகிப் பீறிப் பிளவுற்றியங்கும் காட்சிகளும் களங்கக் களங்களும் இந்த நாட்டில் மிகப் பேராளம்!

தொழில் வழியாகவும் மரபு வழியாகவும் வெறும் பிரிவும் வெறும் பிளவும் உற்று வெற்று நிலையில் இயங்கிய குலப்பிரிவுகள் அனைத்தையும் பிறப்பு அடிப்படையில் தோன்றிய பிரிவுகளாகக் கட்டுக்கதையிட்டுபொய்ந்நெய்யிட்டு போலிப் புனைவாடைகள் உடுத்திப் புழுத்துப் போகுமாறும், நாற்றமெடுத்து நலியுமாறும் செய்த பெருமை இம் மண்ணில் வந்தேறிய ஆரியர்களுடையதே!

இன்னும் மேலும் மேலும் வளர்த்தெடுப்பதில் கண்ணுங் கருத்துமாகச் சூழ்வினைகளில் தொய்யாது ஈடுபடுகின்றனர். "ஜா" என்ற வடமொழிச்சொல்லுக்குப் பிறப்புக் கருத்து மூலம் இருப்பதை வைத்துக் கொண்டு "சாதி" என்ற கூட்டத்திற்கான பொதுத் தமிழ்ச்சொல்லையே "ஜாதி" என்றவாறு பலுக்கி (உச்சரித்து) தங்கள் சூழ்ச்சிக் கருத்துக்கு நிலைப்பாடு கற்பித்தனர்! வெண்ணிறமும் உரத்த கட்டுர இழுப்பும் பறிப்புமான குரலில் அதிர்வெய்திய பண்டை யறிவினரும் மதிகலங்கி மருண்டனர்!சாதியுணர்ச்சியென்னும் கீழ்மைக்கும் கீழாகத்தீண்டாமை, அண்டாமை,காணாமை போன்ற கொடுங்கடிய கீழ்மையுணர்ச்சிகளும் இத்தென்னாட்டில் விளைந்தன. இவற்றின் சாயல்கள் இன்னும் சாய்ந்து போய்விடவில்லை!

இத் தமிழகத்திலுள்ள சாதிகளை இன்று கட்டிக்காத்து வரும் மூலக்காவல்நாயாகப் பார்ப்பனியம் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. அது, இந்து மதம் என்னும் கற்பனைப் பூதத்தின் இயக்க மூலமாகச் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. ஒரு சாதிக்காரன் என்பவன் தனக்குக் கீழாகச் சொல்லப்பட்டு வரும் மற்ற சாதிக் காரர்களுக்கு முன் செம்மாப்பும் இறுமாப்புங் கொண்டு நடக்கின்றான். தன் சாதிக்கும் உயர்ந்ததாகச் சொல்லப்படும் சாதிக்காரர்களை அதேபொழுதுமேலாக மதிக்கின்றான். ஒவ்வொரு சாதிக்காரனிடமும் இவ்வகைக் கீழ்மைக்குணம் அல்லது தாழ்வுணர்ச்சி கருவுணர்ச்சியாக அமைந்துள்ளது.ஒவ்வொருவனும் தன்னினும் தாழ்ந்த குலம் என்ற பிற குலத்தின் முன் கொள்ளும் ஒருவகைப் பீற்றலான செருக்குணர்வில்தான் சாதியின் நிலைப்பே பெரும்பாலும் கட்டுக்குலையாமல் கிடக்கின்றது. சாதியமைப்புகளின் மேல்தளத்தில் இவ்வகை இனிப்பு நன்கு மெழுகிப் பூசப்பட்டுக்கிடக்கின்றது. இப் போலிமைப் பூச்சினை நக்கிக்கிடக்கும் நாயாகவே சாதியுணர்வாளன் ஒவ்வொருவனும் வாலாட்டித் திரிகின்றாள்.

குமுகாயப் புரட்சியை விளைக்கவும் பொதுவுடைமை நிலமாக இத் தமிழகத்தையே தலைகீழாய்ப் புரட்டி நிலைநிறுத்தவும் பகுத்தறிவு நிலமாகவே தமிழகத்தையே சமைக்கவும் கிளம்பி எழும்பியுள்ள இளைஞர்களில் பெரும்பாலோரும் மறைமுகமாக சில சூழல்கள் தங்களை அறியாமலேயே வெளிப்படையாக தத்தம் பொய்ச் சாதிப் போலிமையுணர்ச்சிகளுக்கு ஆளாகிப் பிதற்றுவதைக் காணலாம்.

திருமணம் செய்து கொள்ளும் பருவம்வரை பகுத்தறிவும் பொதுவுடைமையும் சாதியொழிப்பும் எழுதிய சுத்திய இளைஞரிற் பலர் திருமணம் செய்யும் நேரம் வந்ததும் வாயடங்கி கைகட்டி “ எல்லாம் பேசலாம்; செயலுக்கு ஒத்துவராது; உலகத்துக்கு ஒத்துவராது" என்று பழங்குப்பையுணர்வுக்கூட்டங்களோடு கூட்டாகிப் போவதையும் நாம் காண்கிறோம்.

பெரும்பாலான புரட்சியுள்ளம் கொண்ட, சாதியுணர்ச்சி ஒழியவேண்டும் என்ற சுடுமையான உணர்வுகொண்ட இளைஞர்கள் பலரும் சீர்திருத்தத் திருமணம் - திருமண ஒப்பந்தம் என்றவாறான ஏமாற்றுத் தலைப்புகளின் கீழ் பார்ப்பானை மட்டும் ஒதுக்கிவைத்துவிட்டு சாதியொழிப்பு, பகுத்தறிவு, பொதுவுடைமை போலும் புரட்சிக் கருத்துகளைப் பேசும் வழக்கங் கொண்ட பேச்சாளிகளை அல்லது கவர்ச்சியான அரசியல் தலைவர்களை முன்வைத்து தன் சொந்தச் சாதியிலேயே(!) தன் சொந்தக் கொடிவழியிலேயே(!) முறைப்படியான பேரங்களால் முடிந்த மணப் பரிசப் பொருள்கள் சுற்றஞ்சூழ நான்கைந்து (வைதிக) வேதியச் சடங்குகளை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற பிறவெல்லாம் முறைப்படி நடக்கத் தாம் ஏதோ புரட்சி செய்து கிழித்துவிட்டதாக உள்ளுணர்வோடு பேசித் திரியும் பீற்றல்களில் ஈடுபடுவதையும் நாம் அடிக்கடி காணுகின்றோம்!

மூடப்பழக்க வழக்கங்களுக்கு ஒரு வகையில் எதிர்ப்பு தெரிவிக்கும் நடைமுறையாவும் - காலவளர்ச்சிக்கு ஓரளவில் இயைந்து போகும் நடைமுறையாகவும் - பகுத்தறிவுக்கு ஓரளவில் இயைபு காட்டும் நடைமுறையாகவும் இதனைக்கொள்ளலாமே தவிர - இதில் மிகப்பெரிய சீர்திருத்தம் இருப்பதாக நாமே தவறாக எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவும் அல்லது உலகத்தை ஏமாற்றவும் கூடாது.

சாதிப் போலிமையுணர்ச்சியை ஒழிப்பதொன்றே முதலில் செய்யவேண்டியதாகும்! ஒவ்வொரு இளைஞனும் இளைஞையும் இதில் விடாப்பிடியாக இருக்க வேண்டும். நம் முன்தலை முறையினரை நாம் அப்படியே விடுவோம்! அவர்கள் திருந்தினால் திருந்தட்டும்

கிடந்துழன்றால் உழலட்டும்!

சாதியுணர்ச்சியில் வெறிகொண்டியங்கும் ஒவ்வொரு தமிழனும் பெரும்பாலும் தன்னல வெறியனாகவும், பொறாமைக்காரனாகவும், பிற மாந்தனை அடக்கியொடுக்க விரும்பும் செருக்குள்ளவனாகவும், வலியவொருவனுக்கு வால்குழைத்தியங்கும் நாயுணர்வினனாகவும், எவ்வொரு கூட்டுணர்வையும் சிதைத்தழிக்கும் தீயுணர்வினனாகவும், போலிப் பெருமையில் நாட்டங்கொள்பவனாகவும் இருப்பதை நன்கு ஊன்றிப்பார்க்கும் பகுத்தறிவார் ஒவ்வொருவராலும் தெளிய உணரலாகும்.

சாதியுணர்ச்சி ஒருவகை விலங்குணர்ச்சி; சாதியில் ஏதோ ஒரு பெருமை இருப்பதாக எண்ணுவது ஒருவகைக் கடைகெட்ட அறியாமை!

பழம் பேரினமாகிய வீரம் செறிந்த பைந்தமிழ் இனம் வீறலுற்று விரிசலடைந்து வேறுவேறாகி இன்று, வீறும் விழிப்பும் விடிவும் அற்று இற்றுக் கிடப்பதற்கு. இந்தச் சாதியுணர்ச்சி என்னும் சாய்க்கடைக் கழிவுத் தேக்கமானது பிரிவுக்குப் பிரிவு நாற்றமெடுத்துக் கிடப்பதே காரணமாகும்.

இப்படிப்பட்டக்கேடுகளையுடைய சாதியை ஒழிக்க வேண்டிபல ஆண்டுகளாக பேசியும் எழுதியும் வந்த தந்தை பெரியார் அவர்களின் உழைப்புக்கு சிறிதளவு பயனேகிட்டியது.

எனவே இவற்றை ஒட்டுமொத்தமாகப் புதைத்து மண் பரப்பவேண்டியது நம் தமிழிளைஞர்கள் அனைவருடைய கடமையுமாகும்.

ஒவ்வொரு தமிழிளைஞனும் தமிழிளைஞையும் இவ் வகை நல்லுணர்வு கொண்டு நம் செந்தமிழினத்தின் பழம்பெருவலிவை மீட்போமாக!

சாதியொழிப்புக்கு ஒரே வழிதான் உள்ளது! அது கலப்பு மணம் ஒன்றே! அது தமிழகமெங்கும் மணம் பெறவேண்டும்! அந்நிலையை நம் இளம் பெறவேண்டும்! அதுஅதுஓர் இளைஞன் அல்லது ஓர் இளைஞை நம் இனத்திற்கு செய்யும் கடமைகளுள் மூலமான ஒன்றாகும்! அக்கடமையை நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் பெருமையாகவும் நல்லோர்கள் துணையுடன் நடத்திக்கொள்ள வேண்டும்! அத்தகு திறமும் துணிவும் அன்ளோருக்குப் பெருக வேண்டும்!

மீண்டும் கூறுகிறோம்: சாதியுணர்ச்சி ஒருவகை விலங்குணர்ச்சி
அது ஒருவகை அறியாமை !
அது ஒருவகை முட்டாள் தனம் !

அது எவர் உள்ளத்தில் இருந்தாலும் அது அழிக்கப்பட வேண்டும் அவ்வகை அறியாமைக்காரர் திருத்தப்பெற வேண்டியவர்! அவரால்தான் இனவொற்றுமை கூடாமல் கிடக்கின்றது!

மதி (திங்களிதழ்)
(17-7-86)

Friday, 23 July 2021

திருவள்ளுவர் உள்ளம் (அமிழ்தம்)

திருவள்ளுவர் உள்ளம்.

அமிழ்தம்.

திருவள்ளுவர் தமதுநூலில்  "அமிழ்தம்" என்னும் சொல்லை ஆண்டுள்ள குறள்களையும், அவற்றின் சிறப்புகளையும் ஆய்வதே இப்பதிவின் நோக்கம்.

அதிகாரம் - 2. வான் சிறப்பு.
குறள் எண் - 11.
"வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று".

தேவநேயப்பாவாணர் இக்குறளுக்கு வழங்கிய ஆய்வுரை வருமாறு:- 
"மழை உலகிற்குச் சாவா மருந்து எனக்கருதப்பெறும் தன்மையது. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும் நீரும், தொடர்ந்த பசி, தகை (தகை = தாகம்) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தால், 'இருமருந்து' எனப்படும். நீரும் சோறும் மழையாலேயே பெறப்படுதலால், மழை உலகிற்கு அமிழ்தமாயிற்று. 

ஆயினும், பிணி மூப்பு சாக்காடு ஆகியன இருத்ததால், சாவாமை என்பது சாக்காடு வரையுள்ள நிலைமையேயாம். மருந்தினால் நோய் நீங்கியவரை சாவினின்று தப்பினானென்று கூறும் வழக்கைக்காண்க.

அமிழ்தம் என்னுஞ்சொல், சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும். அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ்- அவிழ்து- அவிழ்தம்-அமிழ்தம் = உணவு. "அறுசுவை நால்வகை யமிழ்தம்" (மணி. 28:16). அவிழ்து-அமிழ்து- அமுது = சோறு, உணவு, நீர். நீரும் உணவாதலால் அமுதெனப்பெற்றது. அமிழ்தம்-அமுதம் = சோறு, நீர்.

மருமம்- (மம்மம்) - அம்மம் = முலை, தாய்ப்பால், குழந்தையுணவு. பாலும் ஒருவகை யுணவாதலாலும், அம்மம், அமுது என்னுஞ்சொற்களின் ஒருபுடை யொப்புமையினாலும், அமுது என்னுஞ்சொல்லும் பாலைக்குறித்தது. அமுது = பால், அமுதம் = பால், அமிழ்து = பால்.

அமுதம் என்னும் தென்சொல் வடமொழியில் அம்ருத என்னும் வடிவுகொள்ளும். அவ்வடிவை அ+ம்ருத என்று பிரித்து, சாவை(மரணத்தை)த்தவிர்ப்பது என்று பொருளுணர்த்தி, அதற்கேற்ப தேவரும் அசுரரும் திருப்பாற்கடலைக்கடைந்தெடுத்த அமிர்தம் என்று கதையுங்கட்டிவிட்டனர் வடமொழியாளர். தேவர் அமுதமுண்டார் என்பது கட்டுக்கதையாதலால், தேவாமிர்தம் என்னும் இல்பொருளை உண்மையாகக் கூறுவதால் ஒரு பயனுமில்லையென்று உணர்க".

பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் ஆகியோர் உரைகள், அமிர்தம் என்பதற்கு பாற்கடலைக்கடைந்து பெறப்பட்ட தேவாமிர்தம் என்னும் பொருளையே தருகிறது. இது எவ்வாறு தவறென்பதை இறுதியில் காண்போம்.

அதிகாரம் - 7. மக்கட்பேறு.
குறள் எண் - 64.
"அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறுகதை அளாவிய கூழ்".

கூழ் = சோறு. தம் என்னுஞ்சொல், பெற்றோரின் உடற்கூறாயிருந்து அவருடம்பினின்றும் வெளிப்பட்ட மக்களின் நெருங்கிய தொடர்பை உணர்த்தும். தேவரும் (சுரரும்), அசுரரும் திருபாற்கடலைக்கடைந்தெடுத்த சுரையை, தேவர் உண்டதனால் சுரர் எனப்பட்டாரென்றும், அச்சுரை சாவைத்தவிர்த்ததனால் அம்ருத எனப்பெயர் பெற்றதென்றும், கதை கட்டிவிட்டனர். அதைக்குருட்டுத்தனமாய் நம்பிய தமிழர், விண்ணுலகப்பொருளெல்லாம், மண்ணுலகப்பொருனினும் மிகச்சிறந்தவை யென்னும் பொதுக்கருத்துப்பற்றி, தலைசிறந்த இன்சுவை யுண்டியை
 அமிழ்து என்றும், அமிழ்தினும் இனியதென்றும் சொல்லத்தலைப்பட்டனர் - இவை, தேவநேயப்பாவாணர் ஐயாவின் விளக்கவுரை.

அதிகாரம் - 9. விருந்தோம்பல்.
குறள் எண் - 82.
"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று".
சாவாமருந்து = சாவை நீக்கும் மருந்து.

அதிகாரம் - 72. அவையறிதல்.
குறள் எண் - 720.
"அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்".

அறிவால் தம்மினத்தவர் அல்லாதவர் உள்ள அவைக்கண், அறிஞராவார் நிகழ்த்தும் அரும்பொருள் சொற்பொழிவு, சாய்கடைக்குள் ஊற்றிய பாலைப்போலும்" - இது தேவநேயப்பாவாணர் ஐயாவின் உரை.
பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார், நாமக்கல் கவிஞர் ஆகியோர், அமிழ்தம் என்னுஞ்சொல்லை நேரடியாக ஆண்டுவிட்டனர். தேவநேயப்பாவாணர், பால் எனவுரைத்ததில் ஒரு சிறப்புண்டு. பாலென்பது உடனடியாக ஆற்றல் தரும் உணவு. சோறுண்ணும் பருவமெய்தாத குழந்தைகளுக்கும் உணவாக இருப்பது.

அதிகாரம் - 111. புணர்ச்சி மகிழ்தல்.
குறள் எண் - 1106.
"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டாலால் பேதைக்கு 
அமிழ்தின் இயன்றன தோள்".

"நான் இவளைத்தழுவும் போதெல்லாம் என் உயிர் தழைக்குமாறு தீண்டுதலால், இவ்விளம் பெண்ணிற்குத்தோள்கள் அமிழ்தினால் அமைக்கப்பெற்றனவாய் 
யிருக்கின்றன" - இது தேவநேயப்பாவாணர் ஐயாவின் உரை. பாவாணர் ஐயாவின் இவ்வுரை தலைவன் கூற்றாக அமைந்து, அவனுயிர் தளிர்த்தலைச்சொல்வதாக அமைந்துள்ளது. தீண்டலால், தலைமகள் உயிரும் தளிர்க்குமல்லவா? ஆகவே,  பொதுகூற்றாக இதனைக்கொள்வதே பொருந்தும்.
மேலும், தளிர்த்தலுக்கு, முன்நிகழ்வாக வாடுதல் இருந்திருக்க வேண்டுமல்லவா? அதனை பாவாணரய்யா வெளிப்பட வுரைக்கவில்லை.
 
பரிமேலழகர், 'தன்னைப்பெறாது வாடிய என்னுயிர்' எனவுரைக்கிறார். வ.உ.சிதம்பரனார், 'கூடாத காலத்து இறந்துபடுவதான உயிரைக் கூடியகாலத்துத் தழைக்கப் பண்ணுதலால் தோள்களை அமிழ்தத்துக்கு ஒப்பிட்டான்', எனவுரைக்கிறார். நாமக்கல் கவிஞர், 'உறுதோறுயிர் தளிர்ப்பத் தீண்டலால்' என்பதைத் 'தீண்டல் உறுந்தோறும் உயிர் தளிர்ப்பதால்' என்ற முறையில் பொருள் கொள்ளவேண்டும் என்றும்; ஒவ்வொரு தடவையும் தீண்டல் புதுப்புதுச் துடிப்பை உயிருக்கு உண்டாக்குகிறது என்றும்; அமிர்தம் என்பது ஓய்ந்துவிட்ட உயிரையும் மீண்டும் செழிக்கச் செய்யும் என்று சொல்லப்படுகிற அரியபொருள் என்றும் உரைக்கின்றார். நாமக்கல் கவிஞர்  வாடுதலைப்பற்றி வெளிப்படக்கூறவில்லை என்பதுடன்  புதுப்புதுத் துடிப்பு, பதுப்புதுச் செழிப்புகள், புதுப்புது துளிர்கள் எனக்கூறி, தளிர்த்தலை ஒரு நேர்கோட்டியக்கமாக உருவகப்படுத்துகிறார். பாற்கடல் அமிர்தம் (தேவாமிர்தம்) ஓய்ந்துவிட்ட உயிரை மீண்டும் செழிக்கச்செய்யாது. இயங்குகின்ற உயிர் ஓய்ந்துவிடாமல் காக்கும் 
என்றே சொல்லப்பட்டுள்ளது. இவை இருக்கட்டும்.

இக்குறளில்தான் அமிழ்தம் என்பதற்கான இலக்கணத்தை ஐயன் வுரைக்கிறார். "தோறும்" என்னுஞ்சொல் மிகமுதன்மையானது. ஒவ்வொருமுறை சேரும்போது தளிர்த்தல் நிகழுகிறது. மறுதலையாக நீங்கும்போது வாடுதல் நிகழ்கிறது. இவ்விரண்டும் மாறிமாறி நிகழ்கின்றன. இதுதான் வள்ளுவர் கூறும் அமிழ்திற்கான இலக்கணம்; வரையறை. புராணத்தில் சொல்லப்பட்ட தேவாமிர்தம் ஒருமுறை உண்டால் போதும்; மீண்டும் மீண்டும் உண்ணவேண்டியதில்லை. தேவாமிர்தம் ஒருமுறை உண்டபின் வாடுதல் நிகழ்வதில்லை. 

ஆகவே, மீண்டும் மீண்டும் உண்ணப்படுவதால் சோறு (நீரும் பாலும் உள்ளடங்கும்), உயிரைத்தளிர்ப்பச்செய்கிறது. ஆகவே, உணவு அமிழ்தம்.

ஐயன் திருவள்ளுவர், இரண்டு அமிழ்தங்களைச்சொல்கிறார். உண்ணுந்தோறும் உடலுக்கு ஆற்றலை தரும் "உணவு" என்னும் அமிழ்தம் ஒன்று. உறுதோறும் உள்ளம் (உயிர்) தளிர்க்கக்செய்யும் அன்புடையார் சேர்க்கையாகிய "காதலன்பு" மற்றொன்று. இவை மண்ணுலக அமிழ்தங்கள். நமது துய்பினால் உடலின் பாகமாகவும், உணர்வாகவும் ஆகக்கூடிய மண்ணுலக அமிழ்தங்கள். எனவே, ஐயன் புராணத்தில் சொல்லப்பட்ட தேவாமிர்தத்தைச்சொல்லவில்லை

(நற்றமிழ் புலனம் இரவிச்சந்திரன் ஐயா அவர்களது பதிவிலிருந்து ச.ந.இளஙகுமரன்)

Wednesday, 7 July 2021

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்...

தொல்காப்பியம் சமற்கிருத ஐந்திர நூல் வழியது என்று கதைப்பதற்கு வாய்த்த , தொல்காப்பியப் பனம்பாரர் பாயிர அடிஒன்று.

அது.

"ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்"

என்பது. ஐந்திரம் பொருளாமா?

நிறைந்த

ஐந்திரம் 'ஓதிய இல்லை
ஐந்திரம் 'கற்ற' இல்லை
ஐந்திரம் 'பயின்ற இல்லை
ஐந்திரம் 'படித்த' இல்லை 
ஐந்திரம் 'கேட்ட' இல்லை
ஐந்திரம் உணர்ந்த இல்லை

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன், எத்தகையன்?

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே"

என்று தொடர்வதன் பொருள் என்ன?

"பொறிவாயில் ஐந்தவித்த பொய்தீர் ஒழுக்கத்தவன்."   (6)

"சுவையொளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை அறிவான்" (27)

"ஐந்தவித்தான் ஆற்றல்" (25)

என்னும் பொய்யாமொழி

“வாளால் போழினும் தாளில் வீழினும் ஒருபடித்தாக இருக்கும் நிலை உள்ளது. உள்ள படி எடுத்தல், படியெடுத்தல். அல்லவா!

"உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு " (26)

என்னும் தவத்தன்; ஐந்திரம் நூல் எனின், அது வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் தழுவியதா! விண்ணவர் கோமான் விழுநூல் என்பர் (சிலப்பதிகாரம் 11:99)' அதுவும் கற்றுப் பெறுவதன்றாம். தீர்த்தநீராடிப் பெறுவதாம் புனைவு.

(செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்களின் தொல்காப்பிய ஆய்விலிருந்து ...  ச.ந.இளங்குமரன். வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.)