இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Tuesday, 21 August 2018

மாமழை போற்றுதும்

மாமழை போற்றுதும்...

மாமழையே மாமழையே
மன்னுயிர்கள் வாழ்வதற்குத்
தன்னுயிரைத் தந்திட்ட
மாமழையே மாமழையே

வந்தவுனை மனதார
வரவேற்று மகிழ்கின்றேன்
போவென்று புகலேன்யான்
ஏனென்று கேட்பாயேல்

வெள்ளமென நீநடந்த
பாதையெலாம் பூமிதனில்
கள்ளமனம் கொண்டவர்கள்
களவாடி வைத்துள்ளார்.

கால்கடுக்க நீயோடி
களைப்புற்று இளைப்பாறும்
கண்மாய் குளமெல்லாம்
கல்நெஞ்சர்  வசப்படுத்தி

நல்லவர்கள் சொல்தன்னை
நயப்புடனே கேளாத
குள்ள மனிதர்கள்
கூறுபோட்டு விற்றதனால்

கழனிவாழ் உழவரெல்லாம்
கஞ்சிக்கு வழியின்றி
கலங்கித் தவித்தனரே..
நிலமெங்கும் வெப்பமயம்.

வல்லவரின் துடுக்குதனை
வலிமையுடன் அடக்குதற்கு
உளமிரங்கி வந்திட்ட
மாமழையே மாழையே

நீ நடந்த பாதைகளை
நீயாக எடுத்துக்கொள்
நீயிருந்த குளம் கண்மாய்
நினக்கே சொந்தம்.

உன் நீதி மன்றத்தில்
ஊழல் கிடையாது
உனை எதிர்த்து  வாழ்ந்தவர்கள்
உலகத்தில் கிடையாது...!

புலவர் ச. ந. இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம்

No comments:

Post a Comment