தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் வெள்ளப் பெருக்கெடுத்து 300க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கிறார்கள். பலஆயிரம் கோடி ரூபாய் பெருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் பாதிப்பிற்குள்ளான அண்டை மாநில மக்களின் துயரம் துடைக்க தமிழக அரசும் மற்றும் தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்கள், மக்கள் ஆகியோர் உதவிக்கரங்களை நீட்டிப் பேருதவிப் புரிந்துவருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து நாள்தோறும் தொடர்வண்டிகள் மூலம் குடிநீா், உணவு, மருந்துகள், அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆனால், தமிழர்களின் மனிதநேயமிக்க இந்த நல்லுறவை சீர்குலைக்கும் வண்ணம் தனிநபர் ஒருவா், பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலிருந்து 139அடியாகக் குறைக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதின் விளைவாக தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் பரிசீலனைக்கு இதை உச்சநீதி மன்றம் அனுப்பியுள்ளது.
பெரியாறு அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அதற்கு கீழே உள்ள ஊர்களில் வாழும் மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதில் சிறிதளவுகூட உண்மை கிடையாது. பெரியாறு அணைக்குக் கீழே 50 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணை உள்ளது. இரு அணைகளுக்கும் இடையே சுமார் 300 அடி ஆழமான பள்ளத்தாக்கு உள்ளது. ஆற்றின் இருபுறமும் உள்ள அனைத்து ஊர்களும் 200 அடி முதல் 300 அடி உயரத்தில்அமைந்துள்ளன.
1976ஆம்ஆண்டுஇடுக்கி அணை கட்டப்பட்ட பிறகோ, அதற்கு முன்போ இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் அளவிற்கு வெள்ளம் வந்ததோ, 300 அடி ஆழம் உள்ள பள்ளத்தாக்கில் 100அடி அளவுக்குக்கூட வெள்ளம் வந்ததோ கிடையாது. மக்களுக்கும், ஊர்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகப் புள்ளி விவரங்களோ, வரலாறோ அறவே கிடையாது.
தண்ணீா் இயற்கையாகப் பள்ளத்தை நோக்கி ஓடுமே தவிர மேட்டை நோக்கிப் பாயாது. உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி 142 அடியாக உயர்த்தப்பட்ட பெரியாறு நீா் மட்டத்தை எப்படியாவது குறைக்கவேண்டும் என்பதற்காக தனி நபர் பெயரால் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது. கேரள அரசால் அளிக்கப்படவில்லை. அதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது புரியாத ஒன்றாக உள்ளது. இந்த மனு இரு மாநில மக்களுக்கிடையே நிலவும் நல்லுறவை அடியோடு கெடுக்கக் கூடியதாகும்.
அன்புள்ள
பழ.நெடுமாறன்
No comments:
Post a Comment