இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 17 July 2014

வள்ளல் பாண்டித்துரைத் தேவரும் பைந்தமிழ்ப் பணியும்., புலவர் ச.ந. இளங்குமரன்.

 நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி தன்னுடைய இல்லத்தையே தமிழ்ச் சங்கத்திற்காக வழங்கி தமிழ்வாழ தன் வளத்தை முழுதும் அர்ப்பணம் செய்தவர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் என்றால் அது மிகையில்லை. அந்த அருமையான மனிதரைப் பற்றி இங்கு பார்ப்போம்.
  தேவரின் இளமைப்பருவம்.
 மறவர் சீமை என்று போற்றப்படும் இராமநாதபுரத்தில்ராஜ வீதியில் அமைந்திருக்கும் கவுரி விலாசம் அரண்மனையில் 21-03-1867  ஆம் நாள் வள்ளல் பொன்னுசசாமித்தேவருக்கும் -பர்வதவர்த்தினி நாச்சியாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார், இவருடைய இயற்பெயர் உக்கிரபாண்டியன் என்பதாகும்.தேவருக்கு மூன்று வயதாகும் போதே தந்தையார் காலமானார்.பின்பு இராமநாதபுரம் சேசாத்ரி ஐயங்கார் அவர்களின் பொறுப்பில் வளர்ந்து வந்தார். 
    இராமநாதபுரம் அழகர்ராஜு, சதாவதானம் முத்துச்சாமி ஐயங்கார் ஆகியோரிடம் தமிழும்,வழக்குரைஞர் வெங்கடேச சாஸ்த்திரி அவர்களிடம் ஆங்கிலமும் பயின்று தேர்ச்சி பெற்றார்.இராமநாதபுரம் சுவார்ட்சு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற இவரின் பள்ளித்தோழர்  பூச்சி சீனிவாச ஐயங்கார் என்பவராவார்.
மணவாழ்க்கை ;
  04-04-1884 ஆஅம் நாள் தன்னுடைய ஜாமீன் பொறுப்பினை ஏற்ற  தேவர் அவர்கள் நாகம்மை நாச்சியாரை மனம் முடித்தார். முதல் மனைவிக்கு குழந்தை  இன்மையால் இரண்டாவதாக துரைக்கண்ணு நாச்சியார் அவர்களை மனம் முடித்தார். அவருக்கும் குழந்தை இல்லாமையால் சோமசுந்தர பாண்டியன் என்பவரை தனது வளர்ப்பு மகனாக வளர்த்து வந்தார்.
அரசியல்பணி ;
      1901 ஆம் ஆண்டு  சென்னை மகான அரசியல் மாநாட்டினை 21, 22, 23, ஆம் நாள்களில் மதுரையில் கூட்டி மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவராகப் பணியாற்றினார்.
       ஆம் ஆண்டு தூத்துக்குடியில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி அதன் தலைவராக வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள்  பணியாற்றினார்.
பாண்டித்துரைத்தேவர்  அவர்களின் பைந்தமிழ்ப்பணி.
  25-04 1901     ஆம் நாள் மதுரையில் தமிழ்ச்சங்க ஆலோசனைக்கூட்டம்  நடத்திய தோடு நில்லாமல்  14-09-1901 ஆம் நாளில் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி அதற்கு தலைவராகப் பொறுப்பேற்றார். 
   அதோடு நான்காம் தமிழ்ச் சங்கத்தில்  சேதுபதி செந்தமிழ் கலாசாலை, பாண்டியன் நூல் ஆய்வு மையம், தமிழ் ஆய்வு மையம்  ஆகிய மூன்று துறைகளை நிறுவி முத்தமிழ்க்கு பெருமை சேர்த்தார்.
  1903 ஆம் ஆண்டு செந்தமிழ் என்னும்  இலக்கியச் சிற்றிதழ் தொடங்கி தொடர்ந்து  45 ஆண்டுகள் நடத்தி வந்தார்.
      பாளையங் கோட்டை, தஞ்சை, திருவாரூர், சென்னை, சிதம்பரம் ஆகிய ஊர்களில் சைவ சித்தாந்த மாநாடுகளில் சொற்பொழிவுகள் ஆற்றினார்.
பாண்டித்துரைத்தேவர் அவர்கள் தொகுத்த நூல்கள்.
     தேவாரம் முதல் திருக்குறள் ஈறாக 96121 பாடல்களில் இருந்த  1647 பாடல்களைத் தொகுத்து பன்னூல் திரட்டு என்னும் நூலை  1898, 1906 ஆண்டுகளில்  வெளியிட்டுச் சிறப்பித்தார். 
 1316  பாடல்களை ஐயம்பதிற்கும் மேற்பட்ட சைவத் தமிழ் இலக்கியங்களில் இருந்து தொகுத்து சைவமஞ்சரி என்னும் நூலாக வெளியிட்டு செந்தமிழ்க்கு சிறப்பு சேர்த்தார்.
     1911 ஆம் ஆண்டில் நாற்கவிராசநம்பி அகப்பொருள் உரையும், மதுரைத் தாண்டவ மூர்த்தி பண்டாரம் எழுதிய திருவாலவாய்த் திருப்பணிமாலை, என்ற நூலும், மதுரைத் தல வரலாறு என்ற நூலும் தொட்டிக்காளை சுப்பிரமணிய தேசிகர் எழுதிய இலக்குமி தோத்திரம் என்னும் நூலும் வெளியிட்டுச் சிறப்பித்தார்.
பாடித்துரைத்தேவர் அவர்களின் பொருளுதவியால் வெளிவந்த நூல்கள் ;
      இன்று தமிழ்த் தாத்தா என்று போற்றப்படுகின்ற உ.வே.சாமிநாத ஐயரவர்கள் பதிப்பத்த புறப்பொருள் வெண்பாமாலை, மணிமேகலை, மதுரைத் திருவ்ளையாடர் திரட்டு ஆகிய நூல்களும், புலவர் சே.ராமலிங்கம் பிள்ளை  எழுதிய தேவாரத் தலைமுறை வைப்பு, சிவஞான சுவாமிகள் பிரபந்த திரட்டு ஆகிய நூல்களும் தேவர் செய்த பொருளுதவியால் வெளிவந்தது. அதுமட்டுமல்ல சபாபதி நாவலர் எழுதிய சிவா சமவாத உரைமறுப்பு, சுன்னாகம் குமாரசாமித் தம்பிரான் எழுதிய தனியலங்கார உரை, சென்னை சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, சேத்தூர் சுப்பிரமணியக் கவிராயர் எழுதிய ஞானாமிர்தம், வில்லிபாரதம், புலவர் திருநாரண ஐயங்கார் எழுதிய சாதக சத்திரிகை, பாண்டியம் (இலக்கண நூல்), சிவஞான போதச் சுருக்கம் ,காஞ்சிபுரம் நாகலிங்க முனிவர் எழுதிய மெய்கண்ட சாத்திரம்,  யாழ்ப்பாணம் கதிரைவேல் பிள்ளை எழுதிய தமிழ்ச் சொல் அகராதி, டி.ஏ.கோபிநாத்ராவ் எழுதிய சோழவம்ச சரித்திரச் சுருக்கம் போன்ற அரும்பெரும் நூல்கள் வள்ளல் பாண்டித்துரைத் தேவரவர்களின் பொருளுதவியால் வெளிவந்து வாழும் தமிழ்க்கு வளமை சேர்த்தது என்றால் அது மிகையில்லை.அப்படிப்பட்ட பைந்தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவரவர்களை இங்கு நினைவு கூர்தல் வையைத் தமிழ்ச் சங்கத்தின் கடப்படாம்.
 

Thursday, 3 July 2014

இனிக்கும் தமிழ் இலக்கணம் . (ஆ ) புலவர் இளங்குமரன் .

சுட்டெழுத்துகள் :- 
                                          அ,இ,உ என மூன்றும் சுட்டெழுத்துகள்  எனப்படும்.அதாவது ஒரு பொருளை கையாலோ அல்லது கருத்தாலோ குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டும் பொருளில் வரும்.
 (எ.கா) அவன், இவன், உவன்.  "அ " என்பது தொலைவில் (சேய்மையில்) உள்ளதையும்,  "இ" என்பது அருகில்  (அண்மையில்) உள்ளதையும், "உ" என்பது நடுவில் (இடையில்) உள்ளதையும் குறிக்கும்.

அகச்சுட்டு:-   ஒரு சொல்லின் உள்ளே இருந்து சுட்டினால் அது அகச்சுட்டு என்று பெயர் பெரும்..  (எ.கா ) அவர், இவர், உவர்.

புறச்சுட்டு:-  ஒரு சொல்லின் வெளியே இருந்து சுட்டினால் அது புறச்சுட்டு என்று பெயர் பெரும்.(எ.கா)  அப்பக்கம், இப்பக்கம், அப்புத்தகம், இப்புத்தகம்.

வினா எழுத்துக்கள்:-- கேள்வி குறித்து வரும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.இவ்வினா எழுத்துகள் ஐந்து வகைப்படும். அவை ஆ, எ, ஏ, ஓ, யா என்பதாகும். இவற்றுள் மூன்று எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்.(எ.கா) எவன், எது, ஏன், யாது.
 ஆ, ஏ,ஓ  ஆகிய மூன்று வினா எழுத்துக்களும் சொல்லின் முடிவில் வரும்.
(எ.கா) அவனோ? அவனே? யானோ?

                                                                                                        (தொடரும்)  

Wednesday, 2 July 2014

இனிக்கும் தமிழ் இலக்கணம்.-------- புலவர் ச.ந. இளங்குமரன்.

  இலக்கணம் என்ற சொல்லுக்கு மொழியின் இயல்பு என்று பொருளாகும்.இலக்கணம், இலக்கியத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு பிற்பட்டதாயினும் ஒரு மொழியை பிழையின்றி எழுதவும், பேசவும் இன்றியமையாதது இலக்கணமாகும். உலக முதன் மொழியாம் நம் தமிழின் இயல்புகளையும்,மரபுகளையும் முறையாக உணர்ந்தால்தான் மொழியை செம்மையாகக் கையாள முடியும்.இலக்கு-குறிக்கோள்; அணம்=காப்பு எனவும் கூறலாம். மொழியின் அழகைப் பேணிக்காப்பது இலக்கணம் என்றால் அது மிகையில்லை.
     தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும் என்பர். அவை முறையே
1) எழுத்து  2)  சொல் 3) பொருள்  4) யாப்பு   5) அணி

     எழுத்து இலக்கணம் 
   ------------------------------
       அ)  ஒரு மொழிக்கு முதல் காரணமாகவும் காதால் கேட்கும் நுட்பத்தின் காரியமாகவும் தோன்றும் ஒலி எழுதப்பட்டு எழுத்து என்று பொருள் படுகிறது. பேசுவதை ஒலிவடிவ எழுத்து என்றும்,  எழுதுவதை வரிவடிவ எழுத்து என்றும் கூறுவர்.
    == எழுத்து  முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகைப்படும்.
  === முதலெழுத்து .==  உயிரெழுத்துகள் பனிரெண்டும், மெய்யெழுத்துகள் பதினெட்டும் (12+18=30) மொத்தம் முப்பது எழுத்துகள் முதலெழுத்து எனப்படும். காரணம் இவையே உயர்மெய் எழுத்துகள் தோன்றக் காரணமாகின்றன.
   ==   உயிரெழுத்து  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,  (பனிரெண்டு)
   == மெய்யெழுத்து க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த், ந், ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ள்,ழ்,ற்,ன்,(பதினெட்டு)
   == உயிரெழுத்து  குறில் , நெடில் , என இரண்டு வகைப்படும்.
         (குறில்) அ,இ,உ,எ,ஒ,  என ஐந்து எழுத்துகளாகும்.
         (நெடில்)  ஆ,ஈ,ஊ,ஏ,ஓ,ஐ,ஔ, என ஏழு எழுத்துகளாகும்.

மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம், இடையினம், என மூன்று வகைப்படும்.
  == க,ச,ட,த,ப,ற     வல்லினம்.
  == ங,ஞ,ண,ந,ம,ன,  மெல்லினம்
  == ய,ர,ல,வ,ழ,ள இடையினம்.          
                                                                                                         ( தொடரும்)