இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 20 December 2013

பாரதியும் பகுத்தறிவும் ....

எட்டயபுரத்தில் பிறந்தவன்
எவர்க்கும்....
எட்டாத உயரத்தில் பறந்தவன்.!
அடிமைத் தேசத்தில்
விடுதலை நெருப்பைக்
கொளுத்தி விட்டு
விடியும் முன்னமே
விடைபெற்றுக் கொண்டவன்.
பக்தி என்னும் கவசம் பூண்டு
பகுத்தறிவு விதைகளைப்
பாரெங்கும் தூவியவன்.
ஆலயம் தோறும் சென்று
ஆண்டவனைத் தேடிடுவோர்
பேதைமை நீங்கிட
அறிவொன்றே தெய்வமென்று
ஆர்ப்பரித்தவன்...
பெண்ணினத்தின் விடியலுக்காய்
பெரும் புரட்சி செய்த
பெரியாருக்கு முன்பிறந்த
பெரியார்....
மனுதரும சாத்திரத்தில்
மதிமயங்கிக் கிடந்தோரின்
மயக்கம் தொலைத்த
மகாகவி.....
பாரதி......
இல்லை ... இல்லை...
இவன் பாரத்தின்
முடத்தையும் மூடத்தையும்
பொசுக்க வந்த பாரத......தீ.........
            ஆக்கம் ; புலவர் இளங்குமரன்.

Friday, 6 September 2013

ஒற்றைத் தமிழ்மகன் ......

"ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை -உள்ளத்தே
ஆற்றைத் தமிழ்த் தாயிங்கு ஆட்சிபுரியும் வரை
எற்றைக்கும்,எவ்விடத்தும், எந்த நிலையினிலும்
 மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால்
பெற்றவர் மேல் ஐயம் பிறப்பின் மேல் ஐயம் என
சற்றும் தயக்கமின்றிச் சாற்று".
                                                                      (பாவலலேறு)

Sunday, 21 July 2013

வரதட்சணை ................

வின்முகட்டில் பவனிவரும் வெண்ணிலா இந்த
விளியழகி முகவோளிமுன் நாணி நிற்கும்
பொன்தகடு வேய்ந்திட்ட சிற்பம் கூட 
 பூவை இவள் கட்டழகைத் தொட்டுப் பார்க்கும்.
வெண்முத்து முல்லைப்பூ தென்னம் பாளை
வெடிப்பு  இவள் புன்னகைக்கு ஈடே ஆகா.
   தேன்சிந்தும் சொல்லழகி சிவந்த இதழின்
   தெவிட்டாத முத்தத்தில் நனைவோம் என்று
   நான்எண்ணி வந்திட்டேன் .ஆனால்?இந்த
   நங்கை என் நாயகியாய் வந்திடச் சமூகம்
   வான் உயர வரதட்சணை தடையைப் போட்டு 
   வாங்குதையா பெண்களுடை உயிரை, கற்பை
   ஏன் இழந்தாய் எனக்கேட்க வேண்டிய கணவன்
   எண்ணுகின்றான் பொன்போருளை மானம் விட்டு.
அணிகலனாய் ஆடம்பரப் பொருட்கள் தன்னை
அறிவையிவள்அணியாமல் இயற்கை அழகு
பணிசெய்ய எழிலரசி யாக வாழும்
பாவையிவள் கட்டழகைத் தொட்டுப் பார்க்க
துணிவுற்று எழுந்திட்ட என்றன் கைகள்
துடிக்குதையா என்செய்வேன் இவளை , அந்த
வணிகக்கடைப் பொருளாக்கி விற்பர் ஆயின்
வாங்கும் நான் வரதட்சணை வாங்க மாட்டேன் . 

Saturday, 15 June 2013

அஞ்சறைப்  பெட்டி(கவிதை)





அஞ்சறைப்  பெட்டி(கவிதை)

நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் 
உலவும் வெளியும் ஒடுங்கிக் கிடக்கும் 
உலகம் என்னுமோர் அஞ்சறைப் பெட்டி 
உழன்று திரியும் உன்னதப் பெட்டி.

கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றறியும் 
ஐம்புலன் அறிவோடு ஆறாம் அறிவால்சிந்தனை 
செய்யும் மனிதனும் ஒருவ்கை அஞ்சறைப்பெட்டி

மணக்கும் மல்லி மஞ்சள் வத்தல் 
பிணக்கை நீக்கும் சீரகம் மிளகு 
கணக்காய் உடலைக் குளிரச் செய்யும் 
வெந்தயம்,கடுகும், பருப்பும் கொண்ட 
மரத்தால்  ஆன மருத்துவப் பெட்டி 

மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து 
சேர்க்கும் பெட்டி இதுவல்ல, மாறாய்
சிற்றூர்ப் புறத்து அம்மாக் களுக்கு 
சிருவட்டுப் பெட்டி,.சில்லறைக்  காசுகள்
 சேமித்து வைக்கும் சேமிப்புப் பெட்டி.

அஞ்சறைப் பெட்டி ..........இன்று 
அழிந்து கொடிருக்கும் பெட்டிகளில்
இதுவே  முதற் பெட்டி............
  

Wednesday, 5 June 2013

கற்றாரைக் கண்டு களி

 கற்றாரைக் கண்டு களி.

நல்லவர் சொற்கேள்,செய் நன்றி மறவாமல் 
அல்லவை நீக்கி அறம்செய்து-இல்வாழ்வில் 
சுற்றத்தார் சூழ்ந்திருக்க பெற்றோரைப் பேணியே
கற்றாரைக் கண்டு களி.

 

Monday, 3 June 2013

தமிழ் எங்கள் உயிர் !      குறள் எங்கள் மறை!

தமிழ் எங்கள் உயிர் !      குறள் எங்கள் மறை!

வள்ளுவர் குறளை பின் பற்றுங்கள்
வளமோடு வாழுங்கள் வாழ்க்கையை..