இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 25 July 2025

கவிதையைக் காதல் செய் நூல் வெளியீடு

#தேனி #வையைத் தமிழ்ச் சங்கம் -  வையைப் #பதிப்பகம் சார்பில் "கவிதையைக் காதல் செய்" நூல் வெளியீட்டு விழாவும் தேனி மாவட்ட இலக்கிய அமைப்புகளின் சார்பில் #ஈரோடு மாவட்ட #ஆட்சியர் திரு #ச.#கந்தசாமி ஐயா அவர்களுக்குப் பாராட்டு #விழாவும் புலவர் ச.ந. இளங்குமரன் தலமை ஒருங்கிணைப்பில் ஈரோட்டில் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி ஐயா அவர்கள் நூலை வெளியிட ஈரோடு மாவட்டத் #தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் #பெ.#இளங்கோ அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு நூல் குறித்து மதிப்புரை வழங்கினார் நூல் ஆசிரியர் #விருமாண்டி #கன்னீசுவரி அவர்கள் ஏற்புரை வழங்கினார். 

தொடர்ந்து "காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் 
மீக்கூறும் மன்னன் நிலம்" எனும் வள்ளுவப் பெருந்தையின் வாய்மொழிக்கு ஒப்ப விளங்கும் எளிமையும், அன்பும், தமிழின்பால் ஈடுபாடும் கொண்டு விளங்கும் #மரபுக் #கவிஞரும், எழுத்தாளருமான  ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.#கந்தசாமி ஐயா அவர்களுக்குப் பாராட்டு விழா தேனி மாவட்ட #இலக்கிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்றது. கவிஞர் பா.#கவிதா கிராம நிர்வாக அலுவலர், முதுநிலை தமிழாசிரியர் ஆ.#முத்துக்குமார், தொல்லியல் ஆய்வாளர் மூ.#செல்வம், கவிஞர் செ.#திராவிடமணி, திருக்குறள் #கற்பூரபூபதி, பா.#செல்வகுமரன், பழ.#வேல்முருகன், குறளரசி #அர்சின் சனா, #மகேசுவரி தட்டச்சர் உள்ளிட்ட பலரும் ஆட்சியருக்கு நூலாடை அணிவித்தும் நூல்கள் வழங்கியும் பாராட்டிச் சிறப்பித்தனர். "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து" எனும் குறளின் பொருளாய் விளங்கிய ஆட்சியர் அவர்கள் அனைவரையும் தம் குடும்ப உறவினராக்கி உரையாடிய பாங்கு எல்லோரையும் வியக்க வைத்தது. இதை நாங்கள் தேனியில் ஐயாவோடு பயணித்த நாட்களிலேயே உணர்ந்திருந்தாலும் ஈரோட்டு நிகழ்வு நெகிழ்வாகவும் அமைந்தது.

நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச் சங்கம், வையைப் பதிப்பகம், வாசிக்கலாம் வாங்க தேனி, சின்னமனூர் செந்தமிழ் இலக்கிய மன்றம், உத்தமபாளையம் நூலக வாசகர் வட்டம், கூடலூர் தேடல் இலக்கிய மன்றம் உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் பேரன்பும் நன்றியும். 

இனிய அன்புடன்
-ச.ந.#இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.

Tuesday, 22 July 2025

நிறையுடைமை நீங்காமை நீங்காமை வேண்டின் குறள் - 154

நிறையுடைமை என்பது ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்களின் சேர்க்கையைக் குறிக்கும். இது ஒருவரது நற்குணங்கள் மற்றும் நல்லொழுக்கங்கள் நிலைத்திருக்க, பொறுமையுடன் நடந்துகொள்வதைக் குறிக்கிறது. குறள் 154, "நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்" என்று, 

ஒருவரது நல்ல குணங்கள் நீங்காமல் இருக்க வேண்டுமானால், அவர் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறது. பொறுமையுடன் இருப்பது ஏன் முக்கியம்?

நல்லொழுக்கம் நிலைத்திருக்க:
  • பொறுமை என்பது நல்லொழுக்கத்தின் அடித்தளம். ஒருவர் பொறுமையுடன் இருந்தால், அவரது நல்லொழுக்கங்கள் அவரை விட்டு நீங்காமல் இருக்கும் என்று குறள் கூறுகிறது.
  • சான்றாண்மை நிலைத்திருக்க:
    நிறையுடைமை என்பது சான்றாண்மைக்கு மிக முக்கியமானது. பொறுமையுடன் இருந்தால், சான்றாண்மை என்னும் பெருந்தன்மை ஒருவரிடம் நிலைத்திருக்கும், என்று குறள் விளக்குகிறது.
  • எல்லா நலன்களையும் தரும்:
    பொறுமை ஒருவரை பல நன்மைகளுக்கு உட்படுத்துகிறது. பொறுமையுடன் இருப்பவர், எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பார்.
சுருங்கச் சொன்னால், நிறையுடைமை என்பது ஒருவரிடம் இருக்கும் நற்குணங்கள் மற்றும் நல்லொழுக்கங்களை நிலைநிறுத்த உதவும் பொறுமையைக் குறிக்கிறது. 

-ச.ந.இளங்குமரன்

Friday, 11 July 2025

திருக்குறள் திருப்பணிக் குழு

திருக்குறள் திருப்பணிக் குழு ....

கன்னியாகுமரியில் 31-12-2024 அன்று நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பங்கேற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருக்குறள் திருப்பணிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, அறிவிப்பில் உள்ளபடி தமிழ் அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர், அரசு விருதாளர் இருவர், எழுத்தாளர் பேச்சாளர் ஒருவர் என்ற வகையில் தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட அமைக்கப் பெற்ற கண்காணிப்புக் குழுவின் கூட்டம் இன்று (11-7-2025) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப் பின்பு தேனி மாவட்ட ஆட்சியர் திரு ரஞ்ஜீத் சிங் இ.ஆ ப., (தலைவர், திருக்குறள் திருப்பணிகள் திட்டம்) அவர்களுடன் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்திற்கான கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் புலவர் ச.ந.இளங்குமரன்,  தேனி மு. சுப்பிரமணி, தேனி சீருடையான, கம்பம் பாரதன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி க. பாப்பாலட்சுமி (உறுப்பினர் மற்றும் செயலர், திருக்குறள் திருப்பணிகள் திட்டம்) மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை உதவியாளர் ஜா. புருசோத்தமன் ஆகியோர் எடுத்துக் கொண்ட ஒளிப்படம்.  

(ஒளிப்படம் - நன்றி: திருமதி மஞ்சுளா அவர்கள், தட்டச்சர், தமிழ் வளர்ச்சித் துறை, தேனி மாவட்டம்)