இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 19 May 2025

பாவேந்தரின் பன்முகம் ச.ந.இளங்குமரன்

வளரி கவிதை இதழ், வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு, கடற்கரை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய பாவேந்தர் நினைவேந்தல் நூல் திறனாய்வு உரையரங்க விழா மிகச் சிறப்பாக நாகர்கோயில் தூயர் இல்ல (பிசப் கவுசு) அரங்கில் நடைபெற்றது. வளரி இதழின் ஆசிரியர் பாவலர் அருணா சுந்தர்ரராசன் ஐயா அவர்களது முன்னெடுப்பில், பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் மாநிலச் செயலாளர் சகாய சுசி அவர்களது நெறியாள்கையில் கடற்கரை இலக்கிய வட்டத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பாவேந்தரின் பன்முகம் என்னும் தலைப்பில் உரையாற்றுவதற்கான சூழலை எமது இளவல் அதிவீரபாண்டியன் அவர்கள் பெற்றுக் கொடுத்தார்.

பாவேந்தரின் பன்முகம்...
மொழியின் வழியாக ஒருங்கிணைந்த இந்திய தேசியத்தை கட்டமைக்க  முயன்றவர் பாரதி... 
தமிழ் மொழியையே தேசியமாகக் தமிழியத்தைக் கட்டமைத்தவர், தமிழ்த்தேசியத்தின் வித்து பாவேந்தர் பாரதிதாசன்...
எனது உரையின் தொடக்கம்....

நல்லதொரு விழா. குறிப்பாக ஒன்பது நூல்களைத் திறனாய்வு செய்த திறனாய்வாளர்கள் அனைவரும் ஒவ்வொரு கோணத்திலும் மிகச் சிறப்பாக நூல்களைத் திறனாய்வு செய்தனர். பேச்சாளர்களே திறனாய்வாளர்களாக இருந்தார்கள். திறனாய்வாளர்கள் நூலாசிரியர்களாகவும், பேச்சாளர்களாகவும் இருந்தது மகிழ்வையும், நெகிழ்வையும் தந்தது. குறிப்பாக இந்த அவை எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் படைப்பாளர்கள் கலந்து கொண்ட அவையாக மிளிர்ந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனை பேர்களுக்கும் பேரன்பும், வாழ்த்தும்.

இனிய அன்புடன்
முனைவர் புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
17-05-2025

Tuesday, 6 May 2025

திருக்குறளே உலகநூல் - ச.ந.இளங்குமரன்

"திருக்குறளை" தேசிய நூலாக அறிவிக்க  வலியுறுத்தி, புதுவையில் உலக திருக்குறள்  சாதனையாளர்கள் பேரவை சார்பில் மூன்றாவது திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்  வையைத் தமிழ்ச் சங்கம், தேனி  சார்பில் புலவர் ச.ந.இளங்குமரன் கலந்துகொண்டு "திருக்குறளே உலகநூல்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். 

உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல் திருக்குறள் மட்டுமே. சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்நூலின் தொடக்கமே உலகத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கியுள்ளது. "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்பது அது.

இந்நூலில் உலகம் என்ற சொற்கள் 51 இடங்களில் பயின்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர உலகத்தைக் குறிக்கும் வையம் என்ற சொல்லும் சில இடங்களில் கையாளப்பட்டுள்ளது. 

திருக்குறள் ஒவ்வொரு தனி மனிதனின் மேன்மை, ஒழுக்கம், பண்பு நலம், உள்ளிட்ட பலவும் உள்ளடக்கி  எழுதப்பட்டுள்ளது. இந்நூல் தனி ஒருவருக்கான நூல் அல்ல, உலக மானுட இனத்திற்குப் பொதுவானது.

தமிழ்நாட்டு அறிஞர்களைத் தாண்டி, உலக அறிஞர்களான ஆல்பர்ட் சுவைச்சர், மெக்காலே, அத்தின்ரோவ், டால்சுடாய்சு, ஜி.யு.போப் உள்ளிட்ட பலராலும் உலக நூல் என்று போற்றப்பட்டுள்ளது திருக்குறள்.

அன்பு அறிவு அருள் அரசியல் ஒழுக்கம் பண்பு பொருள் காதல் இல்லறம் துறவறம் என மனிதக் கூறுபாடுகள் எந்த மனிதனுக்குச் சொந்தமானவை என்றால், உலக மனிதர்கள் அத்தனை பேருக்கும் இவை யாவும் பொதுவானவை என்பது முடிவாகும். இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக உள்ளடக்கி இருக்கின்ற திருக்குறளும் அதைப் போலத்தான். திருக்குறள் பிறந்த இடம் தமிழ்நாடு, அதில் எழுதப்பட்டிருக்கின்ற மொழி தமிழ், அதில் சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துகள் உலக மானுடம் சார்ந்தவை. எனவே திருக்குறளை உலக நூலாம். இது சமயம் கடந்தது, மொழி கடந்தது, இனம் கடந்தது, ஆனால் உலக மானுடம் சார்ந்தது. 

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.