இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Tuesday, 21 November 2023

செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் - புலவர் ச.ந.இளங்குமரன்.

செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் – ச.ந.இளங்குமரன்
November 21, 2023
 
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      22 November 2023      அகரமுதல

செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார்

தமிழ்வாழ்த்து

(கலித்துறை)

அகர முதலா னவளே அமிழ்தே அருள்வாய்

இகர உகர உடல்நீ உயிர்நீ உணர்வாய்

பகர்கிறே னிப்பா வரங்கில் பரவசம் கொள்வாய்

பகர்வாய்  பகர்வதி ளங்குமர னல்லதமிழ் தானென்றே!

(நேரிசை வெண்பா)

தந்தைக்கு வாய்த்த தவப்புதல்வன் செந்தமிழ்ச்சீர்

சிந்தை நிறைதிரு வள்ளுவன் – தந்தைதந்த

செந்தமிழ்க் காப்புக் கழகமதை செவ்வனே

முந்தியே காப்பார் முனைந்து

(நேரிசை வெண்பா)

தனித்தமிழை மீட்டெடுத்த தன்மான வீரன்

கனித்தமிழ்ச் சொல்லன் கணியன் – இனித்ததமிழ்

கல்விமொழி யாவதற்குக் கண்ணுறக்கம் விட்டொழித்த

வல்லார் இலக்குவனார் வான்.

பூவில் மதுவிருக்கும் பொன்னில் ஒளியிருக்கும்

காவில் மணமிருக்கும் கண்டிருப்பீர் – நாவினில்

நற்றமிழ்ச் சுவைமணக்க நாளெல்லாம் தொண்டுசெய்த

பொற்றமிழர் லக்குவனார் காண்.

(எண்சீர் விருத்தம்)

துள்ளிவரும் சொல்லடுக்கி உணர்வை ஊட்டி

தூயதமிழ்ப் பேச்சாலே படையைக் கூட்டி

எள்ளிநகை யாடியதீப் பகையை ஓட்டி

இன்றுவரைத் தென்புலத்தில் நிலைக்கா வண்ணம்

கள்ளிருக்கும் மலர்க்கூட்டம் கமழு கின்ற

காடாக்கிக் காட்டியவர்; இந்தி என்னும்

கள்ளியினைத் தோலுரித்துத் தொங்க விட்ட

உள்ளொளியாம் இலக்குவரைப் போற்ற வாரீர்!

(அறுசீர் விருத்தம்)

வாழ்நா ளெல்லாம் தமிழுக்காய்

வளமும் நலமும் சேர்த்திட்டார்

வீழ்நா ளில்லாத் தமிழ்த்தொண்டால்

வெள்ளம் போல மாணவர்கள்

சூழ்ந்து நின்று இந்திதனை

சூரை கொள்ளத் துணிந்திட்டார்

சூழ்கொள் மாணவர் போர்வாளாய்

சுழன்றார் களத்தில் இலக்குவனார்!

பொங்கும் தமிழின் புகழோங்க

சங்கத் தமிழ்நூல் ஆய்ந்தளித்தார்

எங்கும் தமிழே நிறைந்திருக்க

இலக்காய் உரைகள் பலதந்தார்

மங்காத் தமிழின் பெருமையினை

மாநில மெங்கும் எடுத்துரைத்தார்

தங்கத். தமிழே தமிழ்நாட்டின்

ஆட்சி கல்வி மொழியெனறார்.

உலகத் தமிழின் குடிப்பெருமை

உலகோர் பலரும் உணர்ந்திடவே

உலகின் முதல்தாய் ஈன்றெடுத்த
ஒல்காப் புகழ்த்தொல் காப்பியத்தை

உலக மொழியாம் ஆங்கிலத்தில்

ஒப்பில் லாமல் மொழிபெயர்த்த

உலகத் தமிழர் இலக்குவனார்

ஒல்காப் புகழைப் போற்றுவமே!

புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Saturday, 18 November 2023

தமிழ் வெல்லும்... (சிந்து கண்ணி) ச.ந.இளங்குமரன்

வெல்லும் தமிழ்...
(சிந்து கண்ணி)

தமிழே எனக்கு உயிராகும் -இன்பத்
தமிழே எனக்கு மூச்சாகும் - இன்பத் 
தமிழே எனக்கு உணவாகும் - இன்பத் தமிழே என்சொல் உற்றாகும்!
தமிழ்வெல்லும்! வெல்லுமே!

தமிழே எனக்கு மதுவாகும் - இன்பத்
தமிழே எனக்குப் பண்ணாகும் - இன்பத்
தமிழே எனக்குத் திருவாகும் - இன்பத் 
தமிழ்நான்  நூல்செயக் கருவாகும்!
தமிழ்வெல்லும்! வெல்லுமே!

தமிழே எனக்குப் போர்வாளாம் - இன்பத்
தமிழே எனக்கு உயர்தோளாம் - இன்பத்
தமிழே எனக்குத் துணைவேலாம் - இன்பத்
தமிழைப் பழிப்பார் தூள்தூளாம்!
தமிழ்வெல்லும்! வெல்லுமே!

உலகில் வாழும் அறிஞரெலாம் - போற்றும் 
உயர்ந்த நூல்தொல் காப்பியத்தை - என்றன்
உயிரில் கலந்த திருக்குறளை - என்றன்
உயிராம் தமிழை வணங்குகிறேன்!
தமிழ்வெல்லும்! தமிழ்வெல்லுமே!

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Saturday, 4 November 2023

இடைக்காட்டுச் சித்தர்,

இடைக்காட்டுச் சித்தர்

கொங்கணச் சித்தரின் சீடர் என்று சொல்லப்படும் இடைக்காட்டுச் சித்தர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்றும், இவர் இடையர் குலத்தில் பிறந்தவர் என்றும் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது  ஞானம் கிடைக்கப் பெற்றவர் என்றும் சொல்லப்படுகிறது. 

இடைக்காடு என்கின்ற ஊர் மானாமதுரைக்கு அருகில் இருக்கிறது. சிவ நெறியையும் சித்தர் நெறியையும் ஒருசேரப் பின்பற்றும் வழக்குரைஞர் தனுசுக்கோடிப் பாண்டியன் அவர்களும் நானும் மகிழுந்தில் பேசிக்கொண்டே வருகின்றோம். நல்ல மழை. வழியிலே சித்தர் ஆலயத்திற்கு சென்று விட்டு ஊருக்கு செல்லலாம் என்று நான் சொல்கிறேன். நல்ல மழையாக இருக்கிறது அண்ணா, மழை நின்றுவிட்டால் சித்தர் ஆலயத்திற்குச் செல்லுவோம், இல்லை என்றால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்வோம் என்றார், 

சரி என்று சொல்லிக் கொண்டே பெரும்பாலும் எந்தக் கோயில்களுக்கும் விரும்பி நான் செல்வது இல்லை, ஆனால் இறைவனுக்கு என்னைப் பார்க்கத் தோன்றினால் அவனாகவே என்னை அழைப்பான் என்றவாறு பல்வேறு செய்திகளைக் குறித்துப் பேசிக்கொண்டே வந்தோம்.  

இடைக்காட்டை நெருங்குகின்ற பொழுது அங்கு ஒரு துளி கூட மழை இல்லை. வழக்குரைஞர் சொன்னார் என்னண்ணே  வியப்பாக இருக்கிறது, இந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை என்று. இப்பொழுது நான் சொன்னேன் சித்தர் என்னைப் பார்க்க விரும்புகிறார் என்று.

இடைக்காட்டுப் பகுதியில் மிகப் பெரிய பஞ்சம் நிலவ இருக்கிறது என்னும் செய்தியினை, சித்தர் தான் பெற்ற ஞானத்தினால், தொலைநோக்குச் சிந்தனையினால் வருவதை முன்கூட்டியே அறிந்து  கொண்டார். அதை  மக்களிடம் சொல்லுகின்ற பொழுது யாரும் அவரை நம்பவில்லை. அவருக்கு ஏதோ கிறுக்குப் பிடித்து விட்டதாகப் பலரும் பேசியிருக்கிறார்கள்.  ஆனால் அப்பகுதியில் மிகப் பெரிய பஞ்சம் வந்திருக்கிறது. அந்தப் பஞ்சத்திலிருந்து தன்னை அவர் காத்துக் கொண்டிருக்கிறார். பஞ்சத்தில் அடிபட்ட பின்பு தான் மக்கள் சித்தரை நம்பத் தொடங்கி இருக்கின்றனர். பின்பு சித்தரின் வழியைப் பின்பற்றி மக்கள் தங்களது பஞ்சத்தைப் போக்கி இருக்கின்றனர் என்கின்ற செய்தி அவ் ஊரில் அறியப் பெற்றோம். மேலும் இடைக்காட்டுச் சித்தர் திருவண்ணாமலையில் உயிர் ஒடுக்க நிலை எய்தினார் என்ற செய்தியும் அறிந்தோம்.

மக்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தைச்  சரி செய்ய முயன்று கோள்களை வணங்கி, கோள்களின் நிலையை மாற்றி அமைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி மாற்றி அமைக்கப்பட்ட இடைக்காட்டுச் சித்தர் ஆலையத்தில் எடுத்த படம் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு வழக்குரைஞர்,..

இப்பொழுது இடைக்காட்டுச் சித்தர் ஆலயத்தை விட்டு  மகிழுந்தில் கிளம்பினோம். வண்டியைக் கிளப்பினோம். இதமான சாரல் பெய்யும் அறிகுறி தென்பட்டது. சித்தர் ஆலயத்தை விட்டு வண்டியில் கிளம்பிய ஐந்து மணித் துளிகளில் பெருமழை பெய்யத் தொடங்கியது. 

என்னண்னெ ஒரு பெரிய அதிசயம், வரும் வழியெல்லாம் மழை, இடைக்காட்டூரில் மட்டும் மழை இல்லை. சித்தரைப் பார்த்து விட்டுக் கிளம்பிய உடன் பெருமழை பெய்கிறது என்று வழக்குரைஞர் பதிவு செய்ய, சித்தர் நம்மைப் பார்க்க வேண்டும் என்று அழைத்தார் பார்த்தோம், பேசினோம், பேசினார், விடைபெற்றுக் கிளம்பினோம். இனி வழி எங்கும் மழை தான்... என்று சொல்லிக் கொண்டே வந்தோம். தேனி நாகலாபுரம் வந்து சேரும் வரை தொடர் மழை பெய்து  கொண்டிருந்தது... மழையோடு இல்லத்தை அடைந்த நேரம் இரவு மணி 12-24....

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன், 
நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், 
தேனி, நாகலாபுரம். 
02-11-2023