இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 26 September 2025

வையைத் தமிழ்ச்சங்கம் தேனி சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா

தேனி வையை தமிழ் சங்கம் வையைப் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி பாப்பா லட்சுமி அவர்கள் நூல்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.  மனிதநேயக் காப்பக இயக்குநர் மா.பால்பாண்டி, சக்சஸ் அகாடமி இயக்குநர் ஈசுவரன், திண்ணை அறக்கட்டளைப் பொருளாளர் அசோகன், சங்கத் தமிழ் அறக்கட்டளைப் பொருளாளர் ஆகியோர் நூல்களைப் பெற்றுச் சிறப்பித்தனர். 

ஜெர்மன் எழுத்தாளர் கங்கா ஸ்ரான்லி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில்  உன்னை அறிந்தால்,  நனைந்த மழை, சீதனம்,  தூவானம் ஆகிய நான்கு நூல்கள் குறித்து மா.தங்கப் பாண்டியன்,  கவிஞர் கூடல் தாரிக்,  ஆசிரியர் மூ.செல்வம், கவிஞர் அ.பாண்டிய மகிழன் ஆகியோர் மதிப்புரை வழங்கினர். நூலாசிரியர்கள் எழுத்தாளர், கெங்கா ஸ்ரான்லி, பா.காவிதா கி.அ.நி., கவிஞர் க.இரா.திருவருள் செல்வி, கவிஞர் இலட்சுமி குமரேசன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

 முன்னதாக கவிஞர் பழ.வேல்முருகன் வரவேற்புரை வழங்க, கவிஞர் பானுரேக வாழ்த்துரை வழங்க, கவிஞர் ஜெயபாண்டி அவர்கள் நிகழ்ச்சியை தொகுக்க பா.செல்வக்குமரன் நன்றி கூறினார்.  நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நூலும் நூலாடையும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நிகழ்வில் மனிதநேயக் கனவு பள்ளி மாணவ மாணவியர், சக்சஸ் அகாடமியினுடைய மாணவ மாணவியர், அறிவு நிறை கவிஞர், சான்றோர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

ச.ந.இளஙகுமரன்

Saturday, 20 September 2025

தொல்காப்பியம் 225 மணி நேர உலக சாதனை - ச.ந.இளங்குமரன்

உலகில் முதன்முறையாக 225 மணி நேரம்  தொல்காப்பியம் பல் சுவை உலக சாதனை தொடர் நிகழ்வு...

ஐந்து அமைப்புகளில் தொடங்கி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 14, கல்லூரிகள் 5, வெளிநாட்டுத் தமிழ் அமைப்புகள் 9, உள்நாட்டுத் தமிழ் அமைப்புகள்  37 உள்ளிட்டவை இணைந்து செய்த மாபெரும் சாதனையாக மலர்ந்திருக்கிறது.  தொல்காப்பியம் -  உரையரங்கம், பேச்சரங்கம், ஆய்வரங்கம், பாட்டரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம், நாடகம், நடனம், ஓவியம் என பல்வேறு நிகழ்வுகள் சிறப்புற, 29 ஆம் நாள் தொடங்கி 7 ஆம் நாள் முடிய சரியாகப் பத்து நாள்கள் தொல்காப்பியம் தவிர வேறு சிந்தனைகள் ஏதுமின்றி தவமாய் நிகழந்த நிகழ்வு. நிழ்வின் முத்தாய்ப்பான செயல்பாட்டில் எமது இனிய தோழமை அகில இந்திய சாதனைப் பதிவுப் புத்தக நிறுவுநர் செ.வெங்கடேசன் அவர்களுக்கும், மீச்சிறந்த ஒருங்கிணைப்பில் நிகழ்வின் வெற்றிக்கு வேராய் விளங்கிய செயலர் தங்கை கலைவாணி உள்ளிட்ட அனைவருக்கும் பேரன்பையும் வாழ்த்தினையும் உரித்தாக்குகின்றோம்.  

நோக்கம் 
1- தமிழின் முதல் நூலும் முதன்மையான நூல் மான தொல்காப்பியத்தை உலகெங்கும் கொண்டு சேர்ப்பது

2- தமிழர் வாழ்வியல் இலக்கிய நூலான திருக்குறள் போல் தமிழர் வாழ்வியல் இலக்கண நூலான தொல்காப்பியம் இளைய தலைமுறை பயன்பெறும் வகையில் பள்ளி கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டும்

3- தமிழ்நாட்டு அரசு தமிழ் வளர்ச்சித் துறையால் திருக்குறள் முற்றோதல் நடத்தப்பட்டு பரிசு வழங்குவது போல், தொல்காப்பியமும் முற்றோதல் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட வேண்டும்.

4- தொல்காப்பியர் பிறந்த நாளை அரசு முறையாக அறிவித்து, ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும்.

5- தொல்காப்பியம் திருக்குறள் என இரண்டையும் தமிழ்நாட்டரசு முதற்கட்டமாக மாநில நூலாக அறிவிப்புச் செய்து, பின் இந்திய ஒன்றியத்தின் தேசிய நூலாக அறிவிக்க ஆவன செய்ய வேண்டும்.

புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச் சங்கம், தேனி தலைவர், உலகக தொல்காப்பியச் சாதனையாளர்கள் பேரவை - புதுவை