இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 29 October 2022

தமிழ் வளர்ச்சித்துறை விழா

29-10-2022 
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கிய கருத்தரங்கம் திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில்  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சா.விசாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ.இளங்கோ அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் தே.இலட்சுமி,
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நாகநந்தினி தமிழறிஞர் தமிழ்ப்பெரியசாமி, பேரா.முனைவர் மனோகரன், தமிழாசிரியர் குயிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இலக்கியக் கருத்தரங்கில் வீரமுரசு சுப்பிரமனிய சிவா குறித்து சா.சுஜாதா (ஜி.டி.என் கல்லூரி தமிழ்த்துறை தலைவர்)
மாயூரம் வேதநாயகம் பிள்ளை குறித்து தமிழறிஞர் துரை தில்லான், ஐராவதம் மகாதேவன் குறித்து வீ.குழந்தைராஜ் (மாவட்டத் தலைவர் தமிழகத் தமிழாசிரியர் கழகம்) நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை குறித்து முனைவர் பெ.சந்திரா (மேனாள் உலகத் தமிழ்ச்சங்க இயக்குநர்) கருத்துரை வழங்கினர். நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்துகொண்டு நெறிப்படுத்திய இனிய பொழுது. தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் இளங்கோ ஐயா அவர்களுக்கு நன்றி.

நிறைவாக அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள்  பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கும்,  தமிழறிஞர் நினைவுபோற்றும் இலக்கியக் கருத்தரங்கம் தொடர்பிலான பேச்சுப்போட்டியில்  வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கும் இன்று 29.10.2022 நடைபெற்ற கருத்தங்கக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் பாராட்டுச்சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். நன்றியுரை புலவர் ச.ந.இளங்குமரன்.

இனிய அன்புடன் 
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Thursday, 27 October 2022

தொல்காப்பியம் திருமணப் பொருத்தம்

சுப திருப்பதி

*தொல்காப்பியம் காட்டும் திருமண (பத்து) பொருத்தங்கள்* :

"பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு,
உருவு, 
 காம வாயில்,
நிறையே, அருளே, உணர்வொடு, திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"

 *ஐயா. தமிழண்ணல் உரை:* 
1. *பிறப்பு* :
நற்குடிப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
2. *குடிமை* :
அந்த நற்குடிக்கு ஏற்ற நல்ல ஒழுக்கம் இருவரிடமும் இருக்க வேண்டும்.
3. *ஆண்மை* :
இருவரிடமும் ஆளுமை ஒத்திருக்க வேண்டும்
4. *ஆண்டு* :
வயது ஒப்புமை வேண்டும்
5. *உருவு* :
வடிவு ஒப்புமையும் வேண்டும் பார்ப்பவர் பொருத்தமான சோடி கனல் வேண்டும்
6. *நிறுத்த காமவாயில்* :
 (தொல்காப்பியர் சிந்தித்துச் சொன்ன அரிய கருத்து)
 உடலில் அமைந்த காம நுகர்வுக்கான கூறுகள்.
 ஒருவர் மிக்க காம வெறி உடையவராகவும் மற்றவர் அளவாகத் துய்ப்பவராகவும் இருந்தால் ஒத்து வராது.
7. *நிறை* :
மனத்தைத் திருமணம் ஆன பின் கண்ட கண்டவாறு ஓட விடாது தடுத்து நிறுத்துதல்
8. *அருள்* :
அருள் உடைமை, அதன் அடிப்படையான அன்பும் உடையவர்களாக இருவரும் திகழ வேண்டும்
9. *உணர்வு* :
ஒருவரை ஒருவர் அறிதல்; புரிந்து கொள்ளுதல் வேண்டும்
10. *திரு* :
செல்வம்.
செல்வம் உடையமையால் வரும் மன மகிழ்ச்சியே திரு.
என்றும் எந்நிலையிலும் திரு உடையார் போன்ற மன நிறைவு அது.
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே

 இப்பத்துப் பொருத்தமுமே மிக இன்றியமையாதன

 *தொல்காப்பியம் - பொருந்தா குணங்கள்* 

"நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி
வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை,
இன்புறல், ஏழைமை, மறப்போடு, ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்."

 *ஐயா தமிழண்ணல் உரை:* 
மணமக்களிடம் அமையக் கூடாத குணங்கள்:
1. ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுவது
2. ஒருவர் மீது ஒருவர் தீமை செய்ய நினைக்கும் கொடுமை
3.ஒருவர் மற்றவரிடம் தம்மைப் பற்றி வியந்து பேசுதல்
4. ஒருவர் மற்றவரைப் பற்றி புறங்கூறுதல்
5. கடுஞ் சொற்களால் திட்டுதல்
6. ஒருவர் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையை மறத்தல்
7. இல்லறக் கடமைகளைச் செய்யாது சோம்பியிருத்தல்
8. ஒருவர் பிறர் குடியினும் தன் குடி மேலென நினைத்துப் பேசுதல்
9. ஒருவர் மற்றவரைவிட்டுத் தாமே இன்புற எண்ணிக்கொள்ளுதல். சேர்ந்து இன்புறாது, தனித்து இன்பங் காணுதல்
10. அறிவின்மை. வறுமையுமாம்
11. மறதி
12. கணவன் மனைவியைப் பிற மகளிரோடு ஒப்பிடுதலும், மனைவி கணவனைப் பிற ஆடவரோடு ஒப்பிடுதல்