புலவர் ச.ந.இளங்குமரன்
நிருவுநர் வையைத்
தமிழ்ச்சங்கம்
நாகலாபுரம், தேனி
வீரம் செரிந்த தமிழ்நாடு
முன்னுரை
இது
பாரதியின் பாட்டுவரிகள் மட்டுமல்ல, நம்
தமிழ் நாட்டுக்கு அமைந்த பாராட்டுவரிகள். கடந்த
கால வரலாற்றையும்,
எதிர்கால நிலைப்பாட்டையும் உணர்த்திய ஒற்றைவரி அதுதான் வீரம்
செரிந்த தமிழ்நாடு.
இந்திய நாடு
விடுதலை அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே
``ஆனந்த
சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ...`` என்று பாடிய பின்பே
பாரதநாடு விடுதலை பெற்றது.
அதைப்போல 1967 – ல் சென்னை
மாகானம் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ``வீரம் செரிந்த தமிழ்நாடு`` என்று பாடிய
அந்த தொலை
நோக்குப் பார்வையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று காதல்
மற்றொன்று வீரம். ``போர்க்களத்தில் பகைவர்கள் வேல்கொண்டு எறிய ஒருகணம் கண்கலை மூடித் திறந்தால் அது வீரனின் வீரத்திற்கு இழுக்காகும் ``-(775) வள்ளுவர் வீரத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
அப்படிப்பட்ட வீர்ர்களை உருவாக்குபவர்கள் தாய்மார்களேயாம். பெற்ற
குழந்தைகளுக்கு பாலோடு வீரத்தையும் ஊட்டிய வீரத்தாய்மார்
பலரை பண்டைத் தமிழர்களின் வரலாற்று ஆவனமான புறநானூறு படம் பிடித்துக் காட்டுகிறது.
பொருளுரை
இதோ
ஒரு தாய்
மீனை உணவாக
உண்ணுகின்ற கொக்கின் இறகைப்போல முழுவதுமாக நரைத்த தலையை
உடையவள். தூய
வெள்ளை நரை
அவளின் முதுமையைக் காடினாலும், உள்ளமோ இளமையின் இருப்பிடமாகத் திகழ்ந்தது.
தன்
நாட்டு மன்னனுக்குத் துனையாக போர்க்களத்தில் பகைவர்களை வெல்வதற்காக தன் மகனைப்
போருக்கு அனுப்பி வைத்துக் காத்திருந்தாள். அந்த் வீரத்தாயின் மகன் கட்டிளங்காளை. போர்களத்தில் யானைப்படைகளைச் சிதறடித்து ஆண் யானையைக் கொன்று மார்பிலே விழுப்புண் பட்டு மாண்டு
போனான்.
இந்தச்
செய்தி அந்த
வீரத்தாயின் காதுகளை எட்டுகிறது.
பொதுவாக ஒரு
பெண் இரண்டு
முறை மகிழ்ச்சியடைகிறாள். ஒன்று
தான் கருவுற்ற பொழுது. அடுத்து தன்
வியிற்றில் உருவான இணையற்ற கருவை உருவாக்கி பிள்ளையாகப் பெறும்பொழுது. இந்த
இரண்டு மகிழ்வினையும் தாண்டி
தன் நாட்டைக் காக்கும் போரில் தன்
மகன் விழுப்புண்பட்டு வீரச்சாவடைந்தான் என்று
கேட்டவுடன் அந்தத் தாயின் கண்களில் கண்ணீர் பெருகியது.
அது அவலக்
கண்ணீரல்ல ஆனந்தக் கண்ணீர்.
அந்தக் கண்ணீர் மலைப்பகுதியில் அடர்ந்திருக்கும் மூங்கில் புதரின்மேல் பெய்த மழையானது எப்படிச் சிதறுமோ அதைப்போல அவளின் கண்ணீர்த்துளிகள் சிதறி ஓடினவாம்.
இந்த வீரத்தாயைப் பற்றிப் படிய புலவரும் ஒரு வீரத்தயாம். அவர்
பெயர் பூங்கன் உத்திரையர் என்பது. அவர்
பாடிய பாடல்
இது
``மீனுண்
கொக்கின் தூவி யன்ன
வானவரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற
ஞான்றினும் பெறிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதறினும் பலவே`` - புறம்-
277.
இன்னொரு தாய் தன் மகனை
நல்ல வீரனாக
வளர்த்தாள். குழந்தைப் பருவத்திலிருந்தே போர்க்களப் பயிர்ச்சிகள் அனைத்தையும் பழக்கப் படுத்தினாள்.
போர்முரசம் கேட்டால் போதும் மகனை
மகிழ்ச்சி பொங்க அனுப்பிவைத்தாள். போர்மறவன் போன இடங்களிலெல்லாம் வெற்றியையே தன் தாய்க்குப் பரிசாகக் கொண்டு வந்தான்.
இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் ஒருநாள் போர்முரசம் முழங்குகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வீர்ர்கள் புலிக்கூட்டம்போல் போர்க்களம் நோக்கி வீர்ர்கள் செல்ல்லாயினர்.
பக்கத்து வீட்டுப் பெண்ணொருத்தி வீரத்தாயின் வீட்டிற்கு வந்து, வீட்டின் முன்பிருந்த சிறிய தூணைப்
பிடித்துக் கொண்டு ``அம்மா
உன் மகன்
எங்கே?`` என்று
கேட்டாள். அதற்கு
புன்முறுவல் பூக்க அந்த
வீரத்தாய் ``என்
மகன் எங்கே
என்று நான்
அறியேன், அந்தப்புலி தங்கிச் சென்ற கற்குகைபோன்ற,
அவனை ஈன்றெடுத்த வயிறு இதுதான். அவனை
நீ பார்க்க விரும்பினால் எங்கே போர்
நடக்கிறதோ அங்கே சென்று
பார்`` என்றாள்
தாயின் வயிறு புலி வாழ்ந்த குகையாக இருந்தது. மகனோ
புலியாக இருந்தான்.
பின்னர் அவனின்
வீரத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? தனது வீட்டில் நடந்த சிறிய நிகழ்வை அழகுத்தமிழில் பாட்டாகப் பாடி அவனியில் அழியாப் புகழுடன் நிலைத்துவிட்ட அந்த வீரத்தாயின் பாட்டு வரிகள் இவை.
``சிற்றில் நற்றூன் பற்றி நின்மகன்
யாண்டுள னோஎன வினவுதி என்மகன்
யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகியே கல்லலை போல
ஈன்ற
வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே! – புறம்
-86
மற்றொரு மறக்குடி மூதாட்டி தன் நாடி
நரம்புகளிலெல்லாம் வீரம் விளைந்து கிடக்கின்றதை வெளிப்படுத்துகின்றாள். அந்த வீர
மறத்தியின் வீரம், துணிவு
நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
படைமறவன் படைக்களத்தில் வெட்டுண்டு உடல் சிதைந்து மாண்டு கிடக்கின்றான். உடன்
சென்ற வீர்ர்கள் போர் முடிந்து வீடு திரும்புகின்றனர். மகனின்
மரணச் செய்தி
அறியாமல் அந்தத்தாய் அவனின் வருகைக்காக காதிருக்கிறாள்
வறண்டுபோன தோள்களின் மேல் நரம்புகள் புடைத்துக் கிடந்த
உடலும், தாமரை
மலர்போன்று வெளிரிக்கிடந்த
வயிறும் அந்த
மூதாட்டியின் முதுமையைப் பறைசாற்றியது. போர்க்களத்திலிருந்து திரும்பிய வீர்ர்கள் மகனுக்காகக் காத்திருந்த அந்த மூதாட்டியிடம்,
உன்மகன் போர்க்களத்தில் புறமுதுகு காட்டி, புறப்புண் பட்டு இறந்துவிட்டான் என்று
சொல்லிச் செல்கின்றனர்.
இதைக்கேட்ட முதியவளின் உடல் வெம்மையுற்றது.
தீப்பிழம்பாகச் சிவந்த கண்கள்
அவள் சினத்தின் உச்சியில் இருப்பதை வெளிப்படுத்தின. நட்டைக் காக்கும் போரில் என்மகன் புறப்புண் பட்டு இறந்து
கிடப்பானாயின் அவனுக்குப் பால் கொடுத்து வளர்த்த என் மார்பை
அறுத்தெறிவேன் என்று வஞ்சினம் முழங்கி உண்மை அறியும் நோக்கத்தில் கையில் வாளோடு
போர்க்களம் சென்றாள்.
போர்க்களத்தில் சிதறியும்,
குவிந்தும் கிடந்த பிணங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தாள். வெட்டுண்டு சிச்தைந்து கிடந்த பிணங்களில் ஒன்றாக தன் மகனது
உடலும் இருக்கக்கண்டு அவற்றைப் புரட்டி ஒன்றாக்கினாள். அவன்
முகத்திலும், மார்பிலும் விழுப்புண் பட்டு மாண்டு
கிடக்கும் தனது மகனது
உடலை தன்
மடியில் கிடத்தியவாறு அந்த மறவனை, மாவீரனைப் பெற்றெடுத்த நாளில் அடைந்த
மகிழ்ச்சியைவிட பெருமகிழ்ச்சியோடு களத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்த அந்த மான
மறத்தியின் மறமாண்பை பாடியவர் காக்கைப்பாடினியார் நற்செல்லையார் என்னும் பெண்பாற்புலவராவார்.
காலத்தால் அழியாத அந்தப் பாடல்
வரிகள்
`நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின்,
முதியோள் சிறுவன்
படைஅழிந்து, மாறினன்`
என்று பலர்கூற,
`மண்டு அமர்க்கு உடைந்தன்ன் ஆயின், உண்டஎன்
முலை
அறுத்திடுவென், யான்
எனச் சினைஇ,
கொண்ட வாளொடு
படுபிணம் பெயரா,
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞன்றினும் பெரிது உவந்தனளே! – புறம்
– 288
நிறைவுரை
வீரத்தின் விளைநிலமாக சங்ககாலத்தில் பெண்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் தான் வழும் நாட்டின்மீது மிகுந்த பற்று வைத்திருந்திருக்கின்றனர். பகைவர்களிடம் இருந்து தன் தாய்நாட்டைக் காக்கும் விதத்தில் தன்னுடைய பிள்ளைகளுக்கு தாய்நாட்டுப் பற்றையும், வீரத்தையும் ஊட்டி வளர்த்திருக்கின்றனர்.தாய்நட்டைக் காப்பதற்காக தங்கள் உயிரை
ஈகம் செய்வதைப் பெருமையாகக் கருதியிருக்கின்றனர். தன் நாட்டை
ஆளும் மன்னனை
தங்களின் உயிராக நேசித்திருக்கின்றனர். மக்கள் மன்னனை
தங்களின் உயிராக நேசித்தார்களென்றால் மக்களின் மேல் மன்னன் வைத்திருந்த மதிப்பைச் சொல்லவும் வேண்டுமோ?
பாரதியின் `வீரம்
செரிந்த தமிழ்நாடு`என்பது வெறும்
வார்த்தையல்ல அது வரலாறு.
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர்-செயலர்
வையைத் தமிழ்ச்சங்கம்,
நாகலாபுரம், திருவரெங்கபுரம் அஞ்சல்,
வீரபாண்டி வழி, தேனி
மாவட்டம் . 625534
பேச 98423 70792.