இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 1 October 2015

வெற்றிக்கு வழி! புலவர் ச.ந.இளங்குமரன்


வெற்றிக்கு வழி

            எனக்கு நேரமே சரியில்லை, எதத் தொட்டாலும் உருப்பட மாட்டேங்குது. எடுத்த தெல்லாம் தோல்வியிலேதான் முடியுது.” என்று நம்மில் பலரும் புலம்புகின்றோம். இதை நாம் சிந்திக்கவேண்டும். நம்மின் தோல்விக்கான அடிப்படைக் காரணங்கள் என்னவென்று நாம் சரியாகப் புரிந்துகொண்டு அதை நீக்கிவிட்டோமென்றால் நமக்கான வெற்றி மிக எளிதாகிவிடும்.

       ஒரு செயலைச் சிறப்பாக செய்து முடிப்பதையும், நம்மின் குறிக்கோளை, இலக்கை சரியாகச் சென்று அடைவதையும் நாம்வெற்றிஎன்ற சொல்லால் குறிப்பிடுகின்றோம். அதுவும் குறைவான காலத்தில், குறைவான உழைப்பில், குறைவான முயற்சியில், குறைவான பொருட்செலவில் நாம் பெறும் வெற்றியை நாம் மிகச் சிறப்பான வெற்றியாகக் கருதுகின்றோம். எனவே வெற்றிக்கான மூலத்தையும், தோல்விக்கான காரணத்தையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது கட்டாயமாகிறது. இதில் தோல்விக்கான காரணங்களைக் களைவதே வெற்றிக்கான படியாக, பாதையாக அமைகிறது.

         நாம் செய்கின்ற செயலைச் சரியான திட்டமிடுதலோடு தொடங்கினால் அச்செயல் வெற்றியாக முடிகிறது. சரியான திட்டமிடுதல் இல்லாமல் தொடங்கப்படும் செயல்கள் தோல்வியில் முடிவதற்கு பெரிதும் வாய்ப்பாக அமைகிறது என்பது உளவியல் அறிஞர்களின் கருத்தாகும்.

       எனவே நாம் நம்மின் இலக்கை, குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகளை முன்கூட்டியே தயார்ப்படுத்தி வைத்திருக்கவேண்டும். தயார்நிலையில் இருக்கும்போது கிடைக்கும் சரியான வாய்ப்பினை தவறாது பயன்படுதவேண்டும். அப்படிப் பயன்படுத்டும்போது நமக்கான வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

       தயார்நிலை + வாய்ப்பு = வெற்றி

       தற்பொழுது நாடெங்கும் போட்டித் தேர்வுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. போட்டித் தேர்வு என்பது போட்டியாளர்களுக்குக் கிடைக்கும் பொதுவான வாய்ப்புதான். என்றாலும் எந்தப் போட்டித் தேர்வாளன் அன்றாடம் படித்து தேர்வினைச் சந்தித்து வெற்றிபெற தன்னைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றானோ அவன் வெற்றி பெறுகின்றான். தன்னைச் சரியாகத் தயார்ப்படுத்திக் கொள்ளாத ஒருவனால் வெற்றிபெற முடியாது.

          தேர்வாளனின் இலக்கு தன் வாழ்வியல் தேவைக்கான வேலையைத் தேடிக்கொள்வது. அதற்கான திட்டமிடல் தேர்வுக்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வது. தேர்வுக்காலம் வாய்க்கும்போது சரியாகப் பயன்படுத்துவது இவை தேர்வில் வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறைகளாகும்.

        இடம் வாங்கவேண்டும், பொருள் வாங்கவேண்டும், நிலம் வாங்கவேண்டும், மனைவாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடைய ஒருவன் முதலில் அதை வாங்குவதற்கான பொருளை சேமிப்பதற்கான திட்டத்தை முதலில் வகுக்கவேண்டும். திட்டத்தின் அடிப்படையில் சிறுகச் சிறுகப் பொருளைச் சேமிக்கப் பழகவேண்டும். பொருள்நிலையில் தன்னைத் தயார்ப்படுத்திகொண்ட பின்பு சரியான  வாய்ப்பு வாய்க்கும்போது வாய்ப்பினைத் தவறாது பயன்படுத்தும் ஒருவன் தன்னின் குறிக்கோளில் வெற்றி பெறுகிறான்.

              குறிக்கோள்,  குறிக்கோளை அடைவதற்கான திட்டமிடல், திட்டமிடலின் அடிப்படையில் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளுதல், தான் தயார் நிலையில் இருக்கும்போது கிடைக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துதல் ஆகியவை வெற்றியின் சூதிதிரமாக அமைகிறது.

      இந்த சூத்திரத்தைச் செயல்படுத்துவதற்கான மூலதனம் முயற்சியும், பயிற்சியும் மட்டுமே. எடுத்ததற்கெல்லாம் இலவசத்தையே விரும்பும் நாட்டில் முயற்சி செய்வது கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும் முயல்க. வெல்க.